
ஊரடங்கு நீட்டிப்பு, கரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கை மேலும் தீவிரப்படுத்துவது ஆகியவை குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அமைச்சர்களுடனும் அரசு உயரதிகாரிகளுடனும் ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனையில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, தமிழக காவல்துறை டி.ஜி.பி. திரிபாதி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர், வருவாய்த் துறை, பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட துறைகளின் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஆலோசனையின்போது பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், "கோவை, திருச்சி உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் கரோனா பாதிப்பின் தாக்கம் குறையவில்லை. ஆறு மாவட்டங்களில் கரோனா பரிசோதனைகளை அதிகரித்து, பாதிப்பைக் கண்டறிய வேண்டும். அடுத்த ஓரிரு வாரங்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும்" என்றார்.