Skip to main content

“கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலம் தமிழ்நாடு” - முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Chief Minister M. K. Stalin's pride Tamil Nadu is the best state in education

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய முனைய திறப்பு விழா இன்று (02-01-24) நடைபெற இருக்கிறது. இதில் பங்கேற்பதற்கும், பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் 38வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்கும் பிரதமர் நரேந்திர மோடி திருச்சி வந்தடைந்து பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றுள்ளார். 

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். விழாவில் பங்கேற்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, “பிரதமர் மோடி அவர்களுக்கு எனது புத்தாண்டு  வாழ்த்துகள் மற்றும் மாணவர்கள், உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய புத்தாண்டு வாழ்த்துகள். ‘எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு’ என  முழங்கிய  பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி. 100 ஆண்டுக்கு முன் நீதிக்கட்சி ஆட்சியில் போடப்பட்ட திட்டத்தால் இன்று நாம் உயர்ந்து இருக்கிறோம்.

நம் திராவிட மாடல் ஆட்சி அனைவருக்கும் கல்வி என்று கல்வி புரட்சியை நடத்தி வருகிறது. அனைவருக்கும் அனைத்து வித  வசதிகளையும் உருவாக்கி உள்ளோம்.  உயர்கல்வி மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும்  திட்டங்கள்  செயல்படுத்தப்படுகிறது. பெண்கள் கல்வியை ஊக்கப்படுத்த கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. அனைத்து தரப்பு மாணவர்களும் தொழிற்கல்வி  பயில ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.   அனைவருக்கும் கல்லூரி கல்வி, ஆராய்ச்சி கல்வி என்பதே நமது கொள்கை. பாரதிதாசன் பல்கலைக்கழகம் சிறந்த பல்கலைக்கழகமாக செயல்பட்டு வருகிறது. இதை தொடங்கியது நமது திராவிட மாடல் அரசு.  

அனைத்து உட்கட்டமைப்பை உருவாக்கி உள்ளதால் தான்  இந்தியாவில் கல்வியில் தமிழ்நாடு முதலிடம் உள்ளது. இந்தியாவிலேயே அதிக சிறந்த கல்வி நிறுவனங்களை கொண்ட மாநிலம் என்றால் அது தமிழ்நாடு தான். அதுமட்டுமின்றி, இந்தியாவின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களில் 37 பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளன. மேலும், பாலிடெக்னிக் படிப்பிற்கான மாணவர்கள் சேர்க்கையில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதலிடம் பெற்றிருக்கிறது. தலைசிறந்த 100 பொறியியல் கல்லூரிகளில், 15 கல்லூரிகள் தமிழ்நாட்டில் தான் உள்ளன.  146 கல்வி நிறுவனங்கள் அதில் இடம் பெற்றுள்ளன.

2023 நிலவரப்படி தமிழ்நாட்டில் 328 கல்லூரிகள்  சிறந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது. உயர்கல்வியின் பூங்காவாக தமிழ்நாடு திகழ்கிறது. அந்த வகையில், தமிழ்நாட்டு மாணவர்களை படிப்பிலும், வாழ்க்கையிலும் வெற்றியாளர்களாக ஆக்க தான் ‘நான் முதல்வன்’ திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. உயர் கல்வி மாணவர்களின் சிந்தனைக்கு ஊக்கமளிக்கும் வகையில் சி.எம். ஃபெல்லோஷிப் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 

இந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலம் என்றால் அது தமிழ்நாடு தான். இப்படி கல்வி நிறுவனங்கள் தொடர்பான எந்த பட்டியல் எடுத்தாலும் அதில் தமிழ்நாட்டு கல்வி நிறுவனங்கள் இடம்பெறும். அனைவருக்கும், கல்வி கிடைப்பதை உறுதி செய்வதே திராவிட மாடல் ஆட்சியின் நோக்கமாக இருக்கிறது. அனைவருக்கும் ஆராய்ச்சிக்கல்வி என்ற குறிக்கோளுடன் சமூகநீதி புரட்சியை கல்வித்துறையில் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருகிறது. இன்னார்தான் படிக்க வேண்டும் என்ற நிலையை மாற்றி அனைவருக்கும் அனைத்து விதமான வாய்ப்புகளை தமிழ்நாடு உருவாக்கி வருகிறது.

புதுமைத் திட்டத்தின் கீழ் சுமார் 3.5 லட்சம் மாணவிகள் உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர். ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது. கல்விக்காக திமுக ஆட்சியில் செயல்படுத்தும் திட்டங்கள் அனைத்துமே மாணவர்களின் அடுத்தகட்ட புரட்சிக்கு முன்னேற்றும். பல்கலைக்கழகங்களுக்கு சிறப்பான இடம் உண்டு. நீங்கள் தான் நாட்டின் எதிர்காலம். நீங்கள்  தேர்வு செய்த துறையில் சிறந்து விளங்குங்கள், நாட்டுக்கும், பெற்றோருக்கும் சேவை வழங்குங்கள்.  பட்டம் வழங்கிய பல்கலைக்கழகங்களுக்கும், ஆசிரியர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் பெருமைதேடித் தாருங்கள். தந்தையாக இருந்து உங்களுக்கு இதை நான் சொல்கிறேன்” என்று பேசினார்.

சார்ந்த செய்திகள்