Skip to main content

மதுரையில் நவீன மாநாட்டு மையத்தை முதல்வர் மு‌.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்! 

Published on 10/09/2022 | Edited on 10/09/2022

 

Chief Minister M. K. Stalin inaugurated the modern conference center in Madurai!

 

மதுரை, தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மதுரை மாநகராட்சியின் சீர்மிகு நகரத் திட்டத்தின் (Smart City) கீழ், ரூ.47.72 கோடி செலவில் தமுக்கம் மைதானத்தில் கட்டப்பட்டுள்ள மதுரை மாநாட்டு மையம் மற்றும் மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகில் ரூ.41.96 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள நவீன வசதிகளுடன் கூடிய பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் ஆகியவற்றை தமிழக முதல்வர் திறந்து வைத்தார். 

 

மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான தமுக்கம் மைதானத்தில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ரூ.47.72 கோடி செலவில் மதுரை மாநாட்டு மையம் கட்டப்பட்டுள்ளது. தமுக்கம் மைதானத்தில் மொத்தமுள்ள 9.68 ஏக்கர் பரப்பரளவில், சுமார் 2.47 ஏக்கர் பரப்பளவில் இம்மாநாட்டு மையம் தரைமட்டத்திற்கு கீழ் ஒரு தளம் மற்றும் தரைதளம் ஆகியவற்றை கொண்டதாக கட்டப்பட்டுள்ளது. இந்த மாநாட்டு மையம், அனைத்து அடிப்படை வசதிகளுடன் தொழில் மற்றும் வர்த்தக பொருட்காட்சி நடத்துவதற்கும், கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும், சுமார் 200 முதல் 3500 நபர்கள் வரை பங்கு கொள்ளும் வகையிலும், பல்வேறு அளவுகளில் உள் அரங்கத்தினை மாற்றி அமைக்கும் வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. மேலும், தரைமட்டத்திற்கு கீழுள்ள தளத்தில் 234 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 357 இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் வாகன நிறுத்துமிடமும் அமைக்கப்பட்டுள்ளது. 

 

மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகில் மாநகராட்சிக்கு சொந்தமான பழைய சென்ட்ரல் மார்க்கெட் பகுதியில் ரூ.41.96 கோடி செலவில் நவீன வசதிகளுடன் இரண்டு அடித்தளங்கள் கொண்ட பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் கட்டப்பட்டுள்ளது. இதில், 110 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 1401 இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையிலும், தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் சுற்றுலா பயணிகளுக்கான தகவல் மையமும், புராதனச் சின்னங்கள் விற்பனை செய்யும் அங்காடி மையமும் கட்டப்பட்டுள்ளன. இந்த பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் திறக்கப்பட்டதன் மூலம், மதுரை மாநகருக்கு வரும் சுற்றுலா பயணிகள் எளிதில் தங்களது வாகனங்களை நிறுத்தி, கோயில் தரிசனத்திற்கு செல்ல முடியும். மேலும், இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் பெருமளவு குறைக்கப்படும். 

 

இக்கட்டடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள், மின்விளக்கு வசதிகள், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள், தீ தடுப்பு பாதுகாப்பு வசதிகள், அவசரகால வெளியேறும் வசதிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை மற்றும் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் இவ்வாகன நிறுத்துமிடத்தில் உள்ளுர், வெளியூர், வெளிநாட்டினர் மற்றும் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக மதுரையின் கலாச்சாரத்தை போற்றும் வகையில் பாரம்பரிய பொருட்கள் விற்பனை செய்வதற்காக சுமார் 102 கடைகளும் கட்டப்பட்டுள்ளது.

 

இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ்மீனா, நகராட்சி நிர்வாக இயக்குநர் பா.பொன்னையா, மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.அனீஷ் சேகர், மதுரை மாநகராட்சி  மேயர் வி. இந்திராணி பொன்வசந்த், துணை மேயர் டி. நாகராஜன், மதுரை மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்