இன்று (01.11.2021) காலை சென்னை மாவட்டம், வேளச்சேரி மற்றும் கோயம்பேடு மேம்பாலங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார். அதனைத் தொடர்ந்து, கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்தில் 75வது சுதந்திரத் தின கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக, தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் தீரத் தியாகிகளின் வீரப்பெருமிதங்களைப் போற்றும் விதமாக ‘விடுதலைப் போரில் தமிழகம்’ என்ற புகைப்படக் கண்காட்சியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார். மேலும், விடுதலைப் போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரம் பிள்ளையின் 150வது பிறந்த ஆண்டினை முன்னிட்டு அவரது வாழ்க்கை வரலாறு குறித்த நகரும் புகைப்படக் கண்காட்சி பேருந்தினைப் பார்வையிட்டு, கொடியசைத்து தொடங்கிவைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எ.வ. வேலு, மா. சுப்பிரமணியன், பெ. சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.