ADVERTISEMENT

“விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்திவருகிறார் முதல்வர்” - அமைச்சர் சக்கரபாணி பேச்சு!!

10:38 AM Oct 25, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஒட்டன்சத்திரம் தொகுதியில் இருக்கும் தொப்பம்பட்டியில் மாநில விரிவாக்கத் திட்டத்திற்கான உறுதுணை சீரமைப்பு திட்டம் மற்றும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் விவசாயிகள் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் உழவர் விழா நடைபெற்றது. இந்த விழாவில் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளான உரம் மற்றும் தென்னை கன்றுகளை வழங்கினார். அதன்பின் விழாவில் உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பேசும்போது, “தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவருகிறார்.

விவசாயிகளுக்காக வேளாண்மைத்துறை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும், விவசாயிகள் நலன் கருதி பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்து செயல்படுத்திவருகிறார். அதன்படி உழவர் விழா நடத்தப்படுகிறது. தொப்பம்பட்டி வட்டாரத்தில் 2021 - 2022ஆம் ஆண்டு அட்மா திட்டத்தின் கீழ் வறட்சியான பகுதியில் நீர் ஆதாரத்தைப் பெருக்கி விவசாய பரப்பு அதிகரிக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. மழை காலங்களில் உபரிநீர் வீணாகி கடலில் கலப்பதை தடுத்து சேமிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக 1,650 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் மாவட்டத்தின் சண்முகநதி, நல்லதங்காள், நங்காஞ்சிறு பகுதியில் பத்து தடுப்பணைகள் அமைக்கப்பட உள்ளன. பரப்பலாறு அணை தூர்வார அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பரப்பலாறு முதல் நங்காஞ்சி ஆறு வரை நீர்வழித் தடத்தில் சிமெண்ட் சாலை அமைக்க 40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் வாகரையில் 25 ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோள மையம் அமைக்கப்பட்டது. முன்னாள் முதல்வர் கருணாநிதி விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொண்டுவந்தார். அந்த வகையில் மு.க. ஸ்டாலின் விவசாயிகள் நலனுக்காக அதிக அளவில் முருங்கை சாகுபடி நடைபெறும் 7 மாவட்டங்களை ஒருங்கிணைந்து ஏற்றுமதி மண்டலமாக அறிவித்துள்ளார்.

மேலும், நெல்லுக்கு ஆதார விலை, கரும்புக்கு ஊக்கத் தொகை ஆகியவற்றையும் அறிவித்துள்ளார். பழனி, ஈரோடு புதிய ரயில் பாதை, பழனியிலிருந்து திண்டுக்கல் திருச்சி வழியாக இயக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் நடவடிக்கையால் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு நோய்தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு பரிசுப்பொருட்களும் வழங்கப்பட்டு உள்ளன. முதல்வர் மு.க. ஸ்டாலின் மீது வைத்த நம்பிக்கையால் உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் அதிக வெற்றியைத் தந்துள்ளனர்” என்று கூறினார். இந்த விழாவில் வேளாண்மைத் துறை அதிகாரிகள், விவசாயிகள், அரசியல்வாதிகள் என பலரும் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT