Skip to main content

கள ஆய்வில் முதலமைச்சர்; காவல்துறையினருக்கு அதிரடி உத்தரவு  

Published on 16/02/2023 | Edited on 16/02/2023

 

chief  minister field inspection take action order to the police department

 

கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள், சட்டம், ஒழுங்கு உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்வதற்காக சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் நேற்று (15.02.2023) காலை சேலம் சென்றார். 15 மற்றும் 16 ஆகிய இரு நாட்கள் ஆய்வு மேற்கொள்கிறார். அஸ்தம்பட்டி ஆய்வு மாளிகையில் அவர் ஓய்வு எடுப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. புதன்கிழமை காலை ஆய்வு மாளிகையில் காலை உணவை எடுத்துக் கொண்டார்.

 

இதையடுத்து முதல்வர் மு.க. ஸ்டாலின், ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் பட்டா மாறுதல், முதியோர் ஓய்வூதியம் மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்டு வரும் ஈரடுக்கு பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார். அதன்பிறகு, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த தொழில்துறை மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் கல்லூரி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

 

chief  minister field inspection take action order to the police department

மாலையில், நான்கு மாவட்டங்களில் பணியாற்றி வரும் காவல்துறை உயர் அலுவலர்களுடன் சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆய்வு மேற்கொண்டார். குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டு வருவதாக காவல்துறையினருக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். அதேநேரம், காவல்துறையின் பணிகள், மக்கள் எளிதில் அணுகும் விதமாக இருக்க வேண்டும் என்றும், காவல் நிலையத்திற்கு பொது மக்கள் எந்தவித அச்சமுமின்றி புகார் அளிக்க வரக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். காவல்துறையின் செயல்பாடுகள் வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும். ஒரு குற்றம் நடப்பதற்கு முன்பே அதைத் தடுக்கும் வகையில் செயலாற்ற வேண்டும். உளவுப்பிரிவினர் கொடுக்கும் தகவல்களை கவனமாக ஆய்ந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

 

chief  minister field inspection take action order to the police department

சட்டவிரோத செயல்கள், குற்றச் சம்பவங்களை தடுப்பதுதான் திறமையான காவல்துறைக்கு இலக்கணம் ஆகும். சமயம், மதம், பண்பாடு சார்ந்த நிகழ்வுகளில் குறிப்பாக கோயில் விழாக்கள், எருது விடும் நிகழ்வுகள் போன்றவற்றில் கவனக்குறைவாக இருந்துவிட்டால் மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசின் மீதான நற்பெயரை பாதித்து விடும் என்று சுட்டிக்காட்டிப் பேசினார். காவல்துறையினர் போதைப்பொருள் ஒழிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சரகம் முழுவதும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும். மாநில எல்லைப் பகுதியாக இருப்பதால் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மாவட்ட எஸ்பிக்கள், காவல் நிலையங்களை அடிக்கடி பார்வையிட வேண்டும். அங்கு வரும் பொதுமக்களை சந்திப்பது, அவர்களிடையே நற்பெயரை பெற்றுத் தரும்.

 

chief  minister field inspection take action order to the police department

எந்தச் சூழ்நிலையிலும் சாதி கலவரம் ஏற்பட்டுவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதில் மாவட்ட ஆட்சியர்களின் பங்கு மிக முக்கியமானது. இது தொடர்பாக வாராந்திர சட்டம் ஒழுங்கு கூட்டத்தில் வருவாய்த் துறையினருடன் ஒருங்கிணைந்து ஆய்வு நடத்தி, தேவையான இடங்களில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைகளை ஆரம்ப நிலையிலேயே தீர்க்க வேண்டும்.

 

chief  minister field inspection take action order to the police department

வருவாய்த்துறை, காவல்துறை ஆகிய துறைகள் நீதித்துறையுடன் இணைந்து வழக்குகளை விரைந்து முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். ஆண்டுக்கணக்கில் வழக்குகளை நடத்துவது குற்றவாளிக்குத் தான் சாதகமாக அமையும். காவல்துறையினர், பழைய வழக்குகளை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இதை டிஜிபி, ஏடிஜிபி, ஐஜிக்கள் ஆய்வு செய்ய வேண்டும். இளைஞர்கள், மாணவர்களின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் போதைப் பொருளை பெருமளவு ஒழிக்கும் காவல் கண்காணிப்பாளரை எப்போதும் பெரிதும் பாராட்டுவேன். குற்ற நிகழ்வுகளில் பெரும்பாலும் நடுத்தர, ஏழை மக்கள்தான் பாதிக்கப்படுகின்றனர். அவர்களிடம் கடுமையாக நடந்து கொள்ளாமல், உண்மைத் தன்மை ஆராய்ந்து அவர்களுக்கு நீதி கிடைக்க உறுதுணையாக இருக்க வேண்டும். அப்போதுதான் காவல்துறை உங்கள் நண்பன் என்பது உண்மையாகும்.

 

chief  minister field inspection take action order to the police department

இந்த ஆய்வுக் கூட்டத்தில் தலைமைச் செயலர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு, ஏடிஜிபி சங்கர், மாவட்ட ஆட்சியர்கள் கார்மேகம் (சேலம்), ஸ்ரேயா சிங் (நாமக்கல்), சாந்தி (தர்மபுரி), தீபக் ஜேக்கப் (கிருஷ்ணகிரி), மேற்கு மண்டல காவல்துறை ஐஜி சுதாகர், சேலம் மாநகர காவல்துறை ஆணையர் நஜ்மல் ஹோடா, சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி மற்றும் நான்கு மாவட்ட எஸ்பிக்கள் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வரிடம் மனு கொடுக்க முயன்ற பாஜக நிர்வாகியால் பரபரப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A BJP executive who tried to petition the Chief Minister stalin

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி உள்ளது. இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் 22 ஆம் தேதி திருச்சியில் ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரத்தை ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை நிறைவு செய்திருந்தார்.

இத்தகைய சூழலில் கோடைக்காலத்தையொட்டி ஓய்வெடுப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (29.04.2024) கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றார். அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். அதன்பின்னர் கொடைக்கானலில் இருந்து மே 4 ஆம் தேதி சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

A BJP executive who tried to petition the Chief Minister stalin

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் கஞ்சாவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மனு கொடுக்க வந்த பாஜக ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி என்பவர் வந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட மதுரை காவல் மாநகர காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதே சமயம் கொடைக்கானலில் இருந்தே தனது அலுவல் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்வார் எனவும் அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் வருகையையொட்டி சுற்றுலா பயணிகள், சுற்றுலாத்தலங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 ஆம் தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது; சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Next Story

கோடை இளவரசியைக் காணச் சென்ற முதல்வர்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
The Chief Minister is coming to see the summer princess with sentiment

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோடை இளவரசியான கொடைக்கானல் பகுதியைக் காண தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள்.

இந்த ஆண்டு, வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அரசியல்வாதிகளும், அரசியல் கட்சித் தலைவர்களும் கோடை இளவரசியான கொடைக்கானலை காண வந்து செல்கிறார்கள். இந்த நிலையில், கோடை வெயிலை தணிக்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மாலத்தீவு செல்வதாக இருந்தது. ஆனால், திடீரென அதை ரத்து செய்துவிட்டு கோடை இளவரசி கொடைக்கானலை காண முடிவு செய்தார். அதன் அடிப்படையில், இன்று காலை 29ம்தேதி சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரைக்கு புறப்பட்ட முதல்வர் அங்கிருந்து கார் மூலமாக கொடைக்கானலில் உள்ள பாம்பார்புரத்தில் இருக்கும் தயாரா ஸ்டார் ஹோட்டலில் மே 4ஆம் தேதி வரை தங்க இருக்கிறார். 

முதல்வர் கொடைக்கானல் வருகையை ஒட்டி கொடைக்கானல் மூஞ்சி கல்லிலிருந்து பாம்பார்புரம் வரும் வரை சாலைகள் பேண்டேஜ் ஒர்க் பார்க்கப்பட இருக்கிறது. அதை தொடர்ந்து, இன்று காலை எட்டு மணி முதல் மதியம் ஒரு மணி வரை வத்தலக்குண்டு காட் ரோடு வழியாக கொடைக்கானல் செல்லும் சாலை போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. அதோடு கொடைக்கானல் மலைப்பகுதியில் ட்ரோன்கள், பலூன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் உத்தரவிட்டுள்ளார். அதுபோல், முதல்வர் பாதுகாப்புக்காக எஸ்.பி தலைமையில் இரண்டு ஏ.டி.எஸ்.பி, 2 டி.எஸ்.பி, ரெண்டு இன்ஸ்பெக்டர், பத்து சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 800க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

The Chief Minister is coming to see the summer princess with sentiment

கடந்த 2019ல் பாராளுமன்றத் தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாகவே முதன் முதலில் கொடைக்கானலுக்கு முதல்வர் ஸ்டாலின் வந்தவர், அங்குள்ள கால்டன் ஹோட்டலில் ஒரு வாரம் தங்கி இருந்து விட்டு சென்றார். அதன் பின், பாராளுமன்றத் தேர்தல் முடிவில் 40க்கு 39 தொகுதிகளை தி.மு.க கைப்பற்றியது. அதேபோல் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாகவே கொடைக்கானல் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பம்பார்புரம் தமாரா ஸ்டார் ஓட்டலில் தங்கி விட்டு சென்ற பின்பு தான் நூற்றுக்கு மேற்பட்ட சீட்டுகள் வாங்கியதன் பெயரில் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றார். அதைத் தொடர்ந்து, மூன்றாவது முறையாக தற்பொழுது பாராளுமன்ற தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு மாதம் இருக்கும் சூழ்நிலையில் கொடைக்கானலுக்கு முதல்வர் ஸ்டாலின் வந்துள்ளார். 

பாம்பாராபுரத்தில் தங்கிய தமாரா ஹோட்டலில் ஒரு வாரம் குடும்பத்தாருடன் தங்கி ஓய்வெடுக்க இருப்பதால் அரசியல் கட்சித் தலைவர்கள், கட்சி பொறுப்பாளர்கள், அமைச்சர்கள் யாரையும் முதல்வர் சந்திக்க விரும்பவில்லை. ஆனால், அரசியல் ரீதியாக மந்திரி சபை மாற்றம் மற்றும் துணை முதல்வராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கொண்டு வருவதற்கான ஆலோசனையும் குடும்பத்தாருடன் பேசி முதல்வர் முடிவெடுக்க இருக்கிறார் என்ற பேச்சும் இருந்து வருகிறது. இப்படி சென்டிமென்ட் மூலம் முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து ஒவ்வொரு தேர்தலையும் கொடைக்கானல் வந்து கோடை இளவரசியை ரசித்து விட்டு செல்வது போலத்தான் தற்பொழுதும் கோடை இளவரசியைக் காண கொடைக்கானல் வந்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, முதல்வர் வருகையையொட்டி, அங்கு போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.