Skip to main content

''தந்திரமாக ஏமாற்றுவதில் திமுகதான் கில்லாடி'' - திருவெறும்பூரில் எடப்பாடி பழனிசாமி பேச்சு!

Published on 31/12/2020 | Edited on 31/12/2020

 

Chief Minister Edappadi Palanisamy's speech in thiruchy

 

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள வெல்கணேசபுரத்தில் அதிமுக சார்பில், 'நல்லாட்சியை நோக்கி எடப்பாடியார்' என்ற தலைப்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்டத் தேர்தல் பொறுப்பாளர் தங்கமணி தலைமை வகித்தார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எம்.எல்.ஏக்கள் சந்திரசேகர், பரமசிவம், முன்னாள் எம்.பி இரத்தினவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

இக்கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசியதாவது,

 

தமிழகத்தில் மீண்டும் அம்மா ஆட்சி தொடர்வதற்கும், தொடங்கப்பட்ட திட்டங்களைச் செயல்படுத்துவதற்கும் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் திமுக நிறைவேற்ற முடியாத கவர்ச்சிகரமான  திட்டத்தை அறிவித்து பொதுமக்களை ஏமாற்றி வெற்றி பெற்றுவிட்டார்கள். அதனால், தமிழகத்திற்கு எந்தவிதப் பயனும் இல்லை. தமிழகத்திற்குரிய நிதியை அவர்களால் பெற்றுத்தர முடியவில்லை. தமிழகத்தில் புதிதாகத் தொழில் நிறுவனங்களைக் கொண்டு வருவதற்கும் அவர்கள் முயற்சி செய்யவில்லை.

 

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பொய் பேசுவதற்கு 'நோபல் பரிசு' கொடுக்கலாம். ஸ்டாலின் அதிமுக பற்றி அவதூறாக, தரம் தாழ்த்திப் பேசி வருகிறார். அவர் மரியாதை தெரியாதவர். அதனால்தான், அந்தக் கட்சிக்கு மக்கள் மரியாதை கொடுக்கவில்லை. ஆட்சிக்கு வர நினைக்கும் அராஜகக் கட்சி திமுகவை கத்தரிக்கோல் போட்டு வெட்டவேண்டும்.

 

திமுக வாரிசு அரசியல் நடத்திவருகிறது. அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டுமே பதவிக்கு வருவார்கள். நான்கு புறமும் குடும்பத்தார் மட்டுமே தேர்தல் பிரச்சாரம் செய்துவருகின்றனர். நேரு, துரைமுருகன், பெரியசாமி இவர்கள் எல்லாம் மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டார்களா என்ன?  அவர்கள் ஏன் பிரச்சாரத்திற்குச் செல்லவில்லை. அவர்களுக்கு மக்களிடம் செல்வாக்கு இல்லையா? அல்லது செல்வாக்கு இல்லாத தலைவர்களைத் தான் திமுகவில் வைத்துள்ளார்களா?

 

அதிமுக அமைச்சர்கள் மீது என்ன ஊழல் என்று அவர்களால் சொல்ல முடியவில்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ரத்தான டென்டர் குறித்து, ஆளுநரிடம்  ஊழல் செய்துவிட்டதாக மனு கொடுத்திருக்கின்றனர். தேர்தல் வந்தாலும் வராவிட்டாலும் அதிமுக உழைக்கும் கட்சி. மக்களுக்கு புயல், வெள்ளம், கரோனா காலத்தில் உதவி செய்யும் கட்சி.

 

2019 ஆம் ஆண்டு 3 லட்சத்து 5 ஆயிரம் கோடியில் 304 தொழிற்சாலைகளை தொடங்குவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்திலுள்ள 5 லட்சம் இளைஞர்களுக்கு நேர்முகமாகவும், 5 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைகிடைக்கும். இப்படி பல தொலைநோக்குத்  திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 

cnc

 

தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்வதாக 'தேசியவிருது' கிடைத்துள்ளது. நீர் மேலாண்மைத் திட்டத்தின் மூலம் காவிரிப் பாசனப் பெரும் பகுதியாக இந்தப்பகுதி உள்ளதால், நீர் மேலாண்மைத் திட்டம் செயல்படுத்துவதற்கு பொதுப்பணித்துறை, ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகளை வைத்து குழு அமைத்தது. அதில், இரண்டு ஓய்வுபெற்ற தலைமை பொறியாளர்களும், 3 உதவிப் பொறியாளர்களும் உள்ளார்கள். அவர்கள் எங்கு நீரைச் சேமிக்கலாம் எனக் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில், அரசுப் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏரி, குளங்களைத் தூர்வாரி மழை நீரைச் சேகரித்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தடுப்பணை கட்டும் பணி இன்னும் மூன்று மாதத்தில் நிறைவுபெறும். அதேபோல் பல இடங்களில் பாலம், சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.

 

Chief Minister Edappadi Palanisamy's speech in thiruchy

 

திருச்சி மாவட்டத்தில் ஜெயலலிதா இருந்தபோது கலை அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, சட்டக் கல்லூரி, பல்கலைக்கழகம், ஐடிஐ, தேசிய தொழில்நுட்பக் கல்லூரி உள்ளிட்டவை புதிதாகத் திறக்கப்பட்டது. அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு நீட் தேர்வில் குறைந்த மார்க் எடுப்பதால் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. தற்போது 7.5% உள் ஒதுக்கீடு செய்ததுமூலம், இந்த ஆண்டு 313 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 92 பேர் பல் மருத்துவப் படிப்பிற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரின் கல்விச் செலவையும் அரசே ஏற்கும். இதன் மூலம் ஏழை மாணவர்கள் பயன்பெறுவார்கள்.

 

இதேபோல் உழைக்கும் மகளிருக்கு 25 ஆயிரம் மானியத்தில் இருசக்கர வாகனம் வழங்கப்பட்டு வருகிறது. முதியோர் உதவித் தொகை 5 லட்சம் பேருக்கு வழங்கப்படுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 90 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்டுவிட்டது. மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 2 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்ந்துள்ளது. கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டத்திற்கு 75 ஆயிரம் கோடியில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் நீர் மேலாண்மை பாதுகாக்கப்படும். தமிழகத்தில் நீர் பிரச்சனை தீரும். இது சம்பந்தமாக ஆந்திரா, தெலுங்கானா முதல்வர்களைச் சந்தித்துப் பேசியுள்ளோம். காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக மக்கள் சபை என்று சொல்லி பொதுமக்களிடமிருந்து புகார்களைப் பெற்று வருகின்றனர். அந்த மனுக்களை ஆளும் எங்களிடம் கொடுப்பதில்லை. எம்.பி. தேர்தலுக்கு முன்பும் பொதுமக்களிடம் கூட்டங்கள் நடத்தி மனுக்களைப் பெற்றுத்தராமல் அவர்களே வைத்துக் கொண்டு ஏமாற்றி அரசியல் நடத்தி வருகின்றனர்.

 

கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து வாக்குகளை வாங்கி, வெற்றி பெற்றார்கள். தற்போது கூட ஸ்டாலின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மூலம் பேசுகிறார். கரோனா காலத்தில் கடந்த 8 மாதமாக விலையில்லாத ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டது. கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக தவறான தகவல்களை திமுக பரப்பி வருகிறது. தந்திரமாக ஏமாற்றுவதில் திமுகதான் கில்லாடி. தி.மு.க. ஒரு நிறம் மாறும் பச்சோந்தி.

 

அதிமுகவில் அடிமட்டத் தொண்டன் உயர்ந்த பதவிக்கு வரமுடியும். திண்டுக்கல்லில் ஐ.பெரியசாமி. உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்தினார்கள். அதில் ஐ.பெரியசாமியை மூலையில் உட்காரவைத்து உதயநிதி ஸ்டாலின் கூட்டம் நடத்தியது வேதனையானது. உதயநிதியின் வயது பெரியசாமியின் அரசியல் வயது.

 

nkn


திமுக தற்போது கார்ப்பரேட் கம்பெனி ஆக மாறிவிட்டது. அதனால் மக்களுக்காக உழைப்பவர்களும், நன்மை செய்பவர்களும் ஆட்சிக்கு வர வேண்டும். அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும். அனைவருக்கும் புத்தாண்டு, பொங்கல், ஜல்லிக்கட்டு தின நல்வாழ்த்துகள்.

 

திருவெறும்பூர் பகுதியில் திருச்சி -தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பழைய பால்பண்ணை முதல் துவாக்குடி வரை சாலையின் இருபுறமும் 14 கிலோமீட்டர் தூரத்திற்கு சர்வீஸ் சாலை அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த திட்டத்தைச் செயல்படுத்துவதில் நீதிமன்றத்தில் வழக்கு இருந்ததால்தான் தாமதம் ஏற்பட்டது. இந்தத் திட்டம் மத்திய அரசு திட்டம் என்பதால் சம்பந்தப்பட்ட மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சரை சந்தித்து விரைவில் திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் சாலை அமைக்கப்படும் என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்