/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_490.jpg)
பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் அரசு திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொள்ளவும் மாவட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வருகை தந்தார்.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது ரூ.36 கோடியே 73 லட்சம் மதிப்பில்நிறைவேற்றப்பட்ட 39 பணிகளைத் துவக்கி வைத்ததோடு ரூ.26 கோடியே 52 லட்சம் மதிப்பிலான 14 புதிய திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார். 21,504 பயனாளிகளுக்கு ரூ.129 கோடியே 34 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மாவட்ட ஆட்சியர் திருமதி ரத்தினா தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், அனைத்துத் துறை அரசு அதிகாரிகளும் அலுவலர்களும் கலந்து கொண்டனர். பின் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் பழனிசாமியிடம் லஞ்ச ஒழிப்புச் சோதனையில் அரசு அதிகாரிகள் அதிக அளவில் சிக்கி உள்ளது குறித்தும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், ‘அரசு எப்படியோ அந்த வழியாகத்தான் அதிகாரிகளும் இருப்பார்கள்’ என்று கூறி இருப்பதைக்குறித்தும்கேட்டபோது, “இது தவறான கருத்து. அரசாங்கம் தானே சோதனை நடத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை யாருக்குக் கீழ் செயல்படுகிறது?அரசுத் துறைகளில் தவறு நடக்கக் கூடாது. அப்படித் தவறுகள் நடப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அவர் ரிட்டையர்டு ஆகி, புதிதாகக் கட்சியைத் தொடங்கியுள்ளார். அவருக்கு என்ன தெரியும்.
70 வயது ஆகிறது. இந்த 70 வயதில் டி.வி நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருக்கிறார். அப்படிப்பட்ட அவர், அரசியல் செய்தால் எப்படி இருக்கும். அவரது டிவி நிகழ்ச்சியைப் பார்த்தால், ஊரில் உள்ள ஒரு குடும்பம் கூட நன்றாக இருக்காது. அவர் கட்சித் தலைவர், அவர் சொல்வதையெல்லாம் நீங்கள் என்னிடம் கேள்வி கேட்கிறீர்களே. அவர் நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் செய்ததாகத் தெரியவில்லை. அப்படி ஏதாவது செய்திருந்தால் நன்றாக இருக்கும். குடும்பத்தைக் கெடுப்பது தான் அவர் வேலை. அந்த டிவி தொடர் பார்த்தால், குழந்தைகளும் கெட்டுவிடும், நன்றாக உள்ள குடும்பமும் கெட்டுவிடும்.
இவர், ஒரு படத்திலாவது நாட்டு மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய பாடல்களைப் பாடியுள்ளாரா?அந்தப் படத்தைப் பார்த்தால், அத்துடன் அந்தக் குடும்பம் காலியாகிவிடும், அதுபோன்ற படங்களில் தான் அவர் நடித்திருக்கிறார். எனவே அவர் சொல்லும் கருத்துகளை எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அரியலூர் மாவட்டத்தில் ராஜேந்திர சோழனுக்கு மணிமண்டபம் கட்டுவது குறித்துப் பரிசீலிக்கப்படும்” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)