
சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்திருந்த உதயநிதி ஸ்டாலின், வரும் வழியில் மயிலாடுதுறையை அடுத்துள்ள தருமபுரம் ஆதீனத்தைச் சந்தித்து, ஆசி பெற்று, ஆதரவு கேட்டுச் சென்றார். அதே பாணியில் மழை பாதிப்பை பார்வையிட வந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் ஆதீனத்தைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பு மயிலாடுதுதுறை பகுதியில் பலவிதமாகப் பேசப்படுகிறது.
"உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்தார். ஆனால் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியோ மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு துயரத்தில் இருக்கும் மக்களையும், பயிர் சேதங்களையும் பார்வையிட வந்தார். முதலமைச்சரின் வருகைக்காக காலையிலேயே முதலமைச்சர் இப்போ வருவார், சற்று நேரத்தில் வந்து விடுவார், சாப்பாடும், நிவாரணப் பொருட்களும் கிடைத்துவிடும் எனக் காத்திருந்தனர் மக்கள்.
"ஆதீனத்திற்கு அருகில் தரங்கம்பாடி, மயிலாடுதுறை சாலையில் பாதாளச் சாக்கடை பாதாளம் போல உள்வாங்கியது. அதனால், ஆதீனம் வழியாக உள்ள குறுகிய சாலையில் நெருக்கடியான சூழ்நிலையில் பொதுமக்களும், பேருந்துகளும் செல்ல வேண்டியிருக்கிறது. முதலமைச்சரின் வருகைக்காக மதியம் முதல் புதுக்கோட்டை, தஞ்சை, உள்ளிட்ட மாவட்ட காவல்துறையினரை கொண்டுவந்து வீட்டிற்கு வீடு, கடைகளுக்கு கடை, சந்துக்கு சந்து நிறுத்தி மக்களைத் திக்குமுக்காடவைத்து நடமாட்டத்தையே முடக்கினர். இப்படி மக்களை முடக்கி, யாரை பார்க்க வந்தார் என்பதுதான் வேதனை" என்கிறார்கள் ஆதங்கத்துடன்.
அதிமுகவினரோ, "புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட கட்டிடம் கட்டுவதற்கான இடம் கொடுத்த ஆதீனத்திற்கு நன்றி கூற வந்தார்" என்கிறார்கள்.