
தமிழ்நாட்டில் போராட்டத்தில் ஈடுபட்டு காவல்துறையால் வழக்குப் பதிவு செய்யப்பட்ட 868 பேரின் வழக்குகளை ரத்து செய்வதாக தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாட்டில் அறவழியில் போராடிய மக்கள் மீது கடந்த ஆட்சியில் போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார். அதன்படி ஏற்கனவே பல்வேறு வழக்குகளை தமிழ்நாடு அரசு தள்ளுபடி செய்திருந்தது. கிட்டதட்ட 5,570 பேர் மீது போடப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது நீட் தேர்வு, மதுக்கடைகள் ஆகியவற்றுக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை தமிழ்நாடு அரசு தள்ளுபடி செய்துள்ளது. அதன்படி நீட் தேர்வுக்கு எதிராக அறவழியில் போராடிய 446 பேர், மதுக்கடைகளுக்கு எதிராக போராடிய 422 பேர் என மொத்தம் 868 பேர் மீது தொடரப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், வழக்கு தொடர்பான அனைத்து மேல் நடவடிக்கைகளும் கைவிடப்படுவதாகவும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.