/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a3355.jpg)
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வடக்கு கொளக்குடி ஜாகிர் உசேன் நகர்ப் பகுதியைச் சேர்ந்த முஜிபுல்லா மகன் உபயத்துல்லா (வயது 8). ஜாபர் சாதிக் மகன் முகமது அபில் (வயது 10). சாதிக் பாட்ஷா மகன் ஷேக் அப்துல் ரஹ்மான் (வயது 13) உள்ளிட்ட 5 சிறுவர்கள்நேற்று (14.04.2025) காலை வெள்ளியங்கால் ஓடையில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது ஓடையில் உள்ள பள்ளத்தில் உபயத்துல்லா, முகமது அபில்,ஷேக் அப்துல் ரஹ்மான் ஆகிய 3 பேர் தவறி விழுந்து மூழ்கியுள்ளனர்.
இதைப் பார்த்த அவர்களுடன் குளிக்கச் சென்ற மற்ற 2 சிறுவர்கள் காப்பத்துங்க என்று கூறி அலறியுள்ளனர். இதைப் பார்த்த அப்பகுதியில் இருந்த சிலர் வெள்ளியங்கால் ஓடையில் இறங்கித் தேடியும் நீரில் மூழ்கிய சிறுவர்கள் கிடைக்கவில்லை. இது குறித்து காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்புத்துறை வீரர்கள் சுமார் 3 மணி நேரத் தேடலுக்குப் பின்னர் 3 சிறுவர்களின் உடல்களை மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர்.
இதையடுத்து காட்டுமன்னார்கோவில் போலீஸார் 3 சிறுவர்களின் உடலையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீஸார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓடையில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வாய்க்கால் பகுதியில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்கள் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்த சிறுவர்கள் முகமது ஹதீஸ் மற்றும் உபயத்துல்லா ஆகியோரின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)