ra

Advertisment

நீதிமன்ற அவமதிப்பாளரை அழைத்து விளக்கம் கேட்க வேண்டிய அதிகாரம் அரசு தலைமை வழக்கறிஞருக்கு இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே நடைபெற்ற ஊர்வலத்தின்போது மேடை அமைத்து பேசுவதற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிஜேபி தேசிய செயலாளர் ஹெச்.ராஜா காவல்துறையை கண்டித்ததுடன், நீதிமன்றத்தை இழிவான சொற்களில் விமர்சித்தார். இதுதொடர்பான செய்திகளை அடிப்படையாக கொண்டு ஹெச்.ராஜாவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சி.ட்டி.செல்வம், எம்.நிர்மல்குமார் அமர்வு தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளதுடன் அக்டோபர் 22ஆம் தேதிக்குள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க ஹெச்.ராஜாவுக்கு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்ய தலைமை நீதிபதி அமர்வுக்கே அதிகாரம் உள்ளதாக ஹெச்.ராஜா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டதை கேட்ட தலைமை நீதிபதி வி.கே.தஹிலரமானி, இதுகுறித்து கவனிப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஹெச்.ராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர ஒப்புதல் அளிக்க கோரி அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணிடம் கடந்த வாரம் தந்தை பெரியார் திராவிடர் கழக காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் கண்ணதாசன் கோரிக்கை மனு அனுப்பியிருந்தார். அந்த மனுவை பரிசீலித்த அரசு தலைமை வழக்கறிஞர் அக்டோபர் 3ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு ஹெச்.ராஜா நேரில் ஆஜராகி விளக்கமளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

Advertisment

ஆனால், உயர் நீதிமன்றத்தை இழிவுபடுத்தியதற்கு ஹெச்.ராஜாவுக்கு எதிரான வலுவான சாட்சியங்கள் உள்ளதால், அவரிடம் விளக்கம் கேட்க தேவையில்லை என்றும், அதனால் ஹெச்.ராஜாவின் கருத்தை கேட்காமல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர ஒப்புதல் அளிக்க அரசு தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிடக்கோரி கண்ணதாசன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தபோது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வது குறித்து ஒப்புதல் அளிக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து மட்டுமே அரசு தலைமை வழக்கறிஞர் முடிவு செய்ய வேண்டும் என்றும்; நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளானவரை அழைத்து விளக்கம் கேட்க வேண்டிய அதிகாரம் அவருக்கு கிடையாது என்றும் நீதிபதி மகாதேவன் தெளிவுபடுத்தியுள்ளார். இருப்பினும் வழக்கு குறித்து அரசு தலைமை வழக்கறிஞர் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் 8ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.