/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/71_38.jpg)
ஆத்தூர் அருகே பழ வியாபாரியை ரவுடிகள் மூலம் கடத்த முயற்சித்த தலைமைக் காவலர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் தில்லைநகரைச் சேர்ந்தவர் அன்பரசன் (40). இவர், சேலம் நகரில் பழக்கடை வைத்துள்ளார். இவரும், சேலம் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் கணினி பிரிவில் பணியாற்றி வரும் தலைமைக் காவலர் ராம் மோகன் (42) என்பவரும் நண்பர்கள். ஆரம்பத்தில், அன்பரசன் நடத்தி வந்த பழக்கடையில் ராம்மோகனும் பங்குதாரராக இருந்துள்ளார். இதற்காக ராம் மோகன், அன்பரசனுக்கு 45 லட்ச ரூபாய் கொடுத்துள்ளதாகவும், அதை அவர் திருப்பிக் கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
தன்னுடைய பணத்தை திருப்பிக் கொடுத்து விடுமாறு ராம்மோகன் பலமுறை கேட்டும், அன்பரசன் இழுத்தடித்து வந்துள்ளார். இந்த நிலையில் ஜூலை 21ம் தேதி, ராமநாயக்கன்பாளையம் வசிஷ்ட நதி பாலம் அருகே அன்பரசனை, 5 பேர் கொண்ட ரவுடிகள் காரில் கடத்த முயன்றனர்.
அந்தக் கும்பலிடம் இருந்து தப்பித்த அன்பரசன் இதுகுறித்து ஆத்தூர் புறநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்த காவல்துறையினருக்கு, அன்பரசனை ரவுடிகள் மூலம் கடத்த முயற்சித்தது தலைமைக் காவலர் ராம் மோகன்தான் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து, காவல்துறையினர் தலைமைக் காவலர் ராம்மோகன் மற்றும் 5 ரவுடிகளைக் கைது செய்தனர். மேலும், காவல்துறையினர் விசாரணை அறிக்கையை மாவட்ட எஸ்பி ஸ்ரீஅபிநவ்விடம் சமர்ப்பித்தனர். அதன்பேரில் ராம்மோகன் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)