/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/thi_2.jpg)
சிதம்பரத்தில் சுவாமி சகஜானந்தா சமூக பேரவை சார்பில் சுவாமி சகஜானந்தா அடிகளாரின் 129-வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கு பேரவையின் காப்பாளரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன் தலைமையேற்று பேசுகையில், ‘’ புரட்சியாளர்களுக்கும், சமூக சீர்திருத்தவாதிகளின் பிறந்தநாளை ஒரு குறிப்பிட்ட தேதியில் கொண்டாடுவது மட்டுமல்லாமல் ஆண்டு முழுவதும் கொண்டாடலாம்.
கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பே ஏழை எளிய மக்கள் கல்வியால் மட்டுமே முன்னேற முடியும் என்ற உயரிய நோக்கில் கல்வி நிறுவனங்களை நிறுவிய சகஜானந்தா ஆன்மீகத்தையும் கல்வியும் இருவிழிகளாக எடுத்து செயல்பட்டுள்ளார்.
அதே காலகட்டத்தில் 17 ஆண்டுகள் சட்ட மேலவை உறுப்பினராகவும், 12 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். சகஜானந்தா பின்பற்றியே ஆன்மிகம் சாதி, மதம் கடந்துள்ளது இதனை வரவேற்கிறோம். இதே ஆன்மீகத்தை வைத்துக்கொண்டு மனிதர்களிடம் பிற்போக்குத்தனமான தகவல்களை கூறி சாதிய முரண்பாடுகளை வளர்ப்பதை எதிர்க்கிறோம்.
அம்பேத்கர் படித்துக் கொண்டிருக்கும் காலத்திலேயே ஏழைகளுக்கு கல்வி நிறுவனங்களை நிறுவிய சகஜானந்தா கல்வியை வளர்க்கவே ஆன்மீகத்தை பயன்படுத்தியுள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/the_0.jpg)
ஆன்மிகம் என்பது மற்றவர்களின் உணர்வு, நட்பு, உறவுகளை மதிப்பதே ஆகும். திருநீறு பூசிக்கொண்டு பூணூல் அணிந்து கொண்டு ஜாதி ஒழிப்புக்கு குரல் கொடுத்தாள் மோடியாகவும், ராஜாவாகவும் இருந்தாலும் வரவேற்போம். சமத்துவம் மலர செய்யும் ஆன்மிகத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருபோதும் எதிர்த்ததில்லை. சகஜானந்தரின் கொள்கைகளை நாடு முழுவதும் எடுத்துச் செல்ல இந்நாளில் உறுதி ஏற்போம். அவரது பிறந்தநாளை தமிழக அரசு அரசு விழாவாக அறிவித்து கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும். காந்தி நினைவு நாளில் உத்திரப்பிரதேசத்தில் இந்து மகாசபை தலைவர் பூஜாவின் சகுன் பாண்டே காந்தியின் உருவ பொம்மையை துப்பாக்கியால் சுட்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடும் சம்பவம் மிகவும் கொடிய விஷ தன்மை உடையது. சனாதன சக்திகள் இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். சனாதன வாதிகளின் புகலிடமாக இந்து மகாசபை உள்ளது. இது வன்மையாக கன்டிக்கதக்கது. காந்தியை கீழ்தரமாக சித்தரித்து அவரை சுட்டுக்கொன்ற கோட்சே வாழ்க என்று கோஷமிட்ட அவர்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
விழாவில் நந்தனார் கல்விக் கழகத்தின் தலைவர் சங்கரன் சகஜானந்தா சமூக பேரவையின் தலைவர் நீதி வளவன் செயலாளர் பாலா துணைத்தலைவர் திருவரசு துணை செயலாளர் ஆதிமூலம் பொருளாளர் மணவாளன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.
முன்னதாக சகஜானந்தா தோற்றுவித்த நந்தனார் பள்ளிகளில் கல்வி பயின்று அரசு தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்று மற்றும் தங்கப்பதக்கத்தை திருமாவளவன் வழங்கினார். மேலும் சகஜானந்தா மணி மண்டபத்தில் இருந்து பள்ளியில் படித்த முன்னாள் மாணவ மாணவிகள் முளைப்பாலிகளை தலையில் சுமந்து கொண்டு மேளதாள முழங்க அவர் வாழ்ந்த இடமான ஓமகுளத்திற்கு பேரணியாக வந்தனர்.
Follow Us