Skip to main content

சிதம்பரம் நடராஜர் கோவிலில் அறநிலையத்துறை ஒருங்கிணைப்பு குழுவினர் ஆய்வு -கோவில் பொது தீட்சிதர்களுக்கு கடிதம்!

Published on 29/05/2022 | Edited on 29/05/2022

 

Chidambaram Natarajar Temple Hindu Temples Coordinating Committee Inspection - Letter to the General Dixit of the Temple!

 

சிதம்பரம் நடராஜர் கோவிலில் இந்து அறநிலையத்துறை ஒருங்கிணைப்பு குழுவினர் ஆய்வுசெய்ய உள்ளதாக கடலூர் இணை ஆணையர் அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஆணையர் ஜோதி கோவில் பொது தீட்சிதர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

 

உலக புகழ் பெற்றதும், சைவ திருத்தலத்தில் முதன்மையானது சிதம்பரம் நடராஜர் கோவில் ஆகும். இந்த கோவிலுக்கு வெளிநாடு, வெளிமாநில, வெளியூர் மற்றும் உள்ளூர் பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்வார்கள். இந்த நிலையில் கோவிலில் உள்ள கனகசபையில் ( சிற்றம்பல மேடையில்)  ஏறி சாமி தரிசனம் செய்ய கோவில் பொது தீட்சிதர்கள் தடை விதித்தனர். இதற்கு பக்தர்கள், தெய்வத் தமிழ் பேரவை, ஆன்மீக அமைப்புகள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தினர். இதனையடுத்து சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் ஏறி சாமி தரிசனம் செய்ய தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பக்தர்கள் கனகசபையில் ஏறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

 

இந்த நிலையில் கடலூர் இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஆணையர் ஜோதி என்பவர் சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் 'அருள்மிகு சபாநாயகர் திருக்கோவில் (நடராஜர் கோவில்) நிர்வாகம் தொடர்பாக வரப்பெற்ற மனுக்கள் குறித்தும், கோவில் சட்டவிதிகளின்படி நிர்வகிக்கப்படுகிறது என்பது குறித்தும், கோவிலை நேரடியாக ஆய்வு செய்து, விசாரணை மேற்கொண்டு கோவில் நிர்வாகத்தைச் சீரமைப்பது குறித்து உரிய பரிந்துரைகள் வழங்கிட இந்து சமய அறநிலையத்துறை சட்டம் 1959 ல் உள்ள சட்டப்பிரிவு 23 மற்றும் 33ன் கீழ் ஆணையருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி ஒரு குழுவினை அமைத்தும் அதன் ஒருங்கிணைப்பாளராக என்னை நியமனம் செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளது. சபாநாயகர் திருக்கோவில் குழு உறுப்பினர்களால்  வரும் 7ம் தேதி முதல் 8ம் தேதி வரை நேரடியாக ஆய்வு செய்யப்பட உள்ளது. ஆய்வின் போது 2014 முதல் நாளது தேதி வரையிலான வரவு, செலவு கணக்குகள். 2014 முதல் நாளது தேதி வரையிலான தணிக்கை அறிக்கைகள்,கோவிலில் நடைபெற்ற  திருப்பணிகள் குறித்தான விவரங்கள், அவற்றிற்கான தொல்லியல்துறை கருத்துரு, இந்து சமய அறநிலையத்துறை அனுமதி விவரம், மதிப்பீடு விவரங்கள், கோவிலுக்கு சொந்தமான கட்டளைகள், அதற்கான சொந்தமான சொத்துக்கள் மற்றும் அவற்றிலிருந்து பெறப்படும் வருவாய், அந்த சொத்துக்களின் தற்போதைய நிலை, இந்து சமய அறநிலையத்துறை சட்டவிதிகளின்படி அங்கீகரிக்கப்பட்ட சொத்துப்பதிவேடு, மரப்பதிவேடு, திட்டப் பதிவேடு மற்றும் காணிக்கை பதிவேடுகள், கோவிலுக்கு சொந்தமான நகைகள் மற்றும் விலை உயர்ந்தவைகள் மதிப்பீட்டறிக்கை, கோவிலுக்குச் சொந்தமான நிலங்கள் மற்றும் அதன் குத்தகைதாரர்கள் விபரம், கேட்பு வசூல் நிலுவை பதிவேடுகள் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். குழுவின் ஆய்வுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் படி கேட்டுக் கொள்கிறேன்' இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இது சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்