/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/natarajar-temple-1_0.jpg)
உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாக விளங்குகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் ஆனி திருமஞ்சனம், மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழா விமர்சையாக நடைபெறும். இந்த விழாக்களில் மூலவரான நடராஜர் வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழாவில் சிவனின் ஜென்ம நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திர நாளில் மூலவரான நடராஜர் அவரது மனைவி சிவகாமசுந்தரியுடன் நடனம் புரிந்தபடி பக்தர்களுக்கு காட்சி அளிப்பது இக்கோவிலின் சிறப்பாகும்.
இதில் தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநில உலக அளவில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வார்கள். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசன விழா நடராஜர் கோவிலில் கடந்த 11-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கோவிலில் விழாக்கள் நடைபெற்ற நிலையில் 19-ஆம் தேதி தேர் திருவிழாவும் 20-ஆம் தேதி மாலை 6.20 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.
பக்தர்களின் நலனை கருதாமல் தீட்சிதர்களின் வசதிக்காக நடத்திய தரிசனம், பக்தர்கள் குற்றச்சாட்டு.
தரிசனம் மதியம் 2 மணியளவில் நடைபெறுமென கோவில் தீட்சிதர்கள் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனால் தரிசனத்தை பார்த்துவிட்டு உணவு அருந்த வேண்டும் என சிவபக்தர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் காலையிலேயே கோவிலுக்கு விரதத்துடன் வந்தனர். பக்தர்களில் சர்க்கரை நோயாளி, ரத்த அழுத்தம் உள்ளவர்கள், வயதானவர்கள், சிறியவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கோவிலுக்கு காலை 9 மணியிலிருந்து வரத்தொடங்கினர். இந்த நிலையில் மதியம் 2 மணி அளவில் கோவிலின் உள்ளே 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடினார்கள்.
கூட்டம் அதிகமாக இருந்ததால் உட்கார முடியாமல் பக்தர்கள் அவதி அடைந்தனர். 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடும் இடத்தில் அவர்களுக்கு இயற்கை உபாதை உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் ‘எங்க கோவில் என கூறிக்கொள்ளும்’ தீட்சிதர்கள் எதுவுமே செய்யவில்லை. இது பக்தர்கள் நலனை கருதாமல் தீட்சிதர்களின் வசதிக்காக நடத்தப்பட்டுள்ளதாக சி.முட்லூர் கிராமத்தை சேர்ந்த பானுசந்தர் கூறுகிறார். மேலும் அவர் இதுபோன்று மாலை 6.20 மணிக்கு நடைபெற்ற தரிசனத்தை பார்த்தது இல்லை. தீட்சிதர்கள் செய்யும் சேட்டையை பொறுத்து கொள்ள முடியாமல் தரிசனம் பார்க்காமல் வெளியே வந்துவிட்டேன். இதே போல் பல பக்தர்கள் வெளியே வந்து தீட்சிதர்களின் செயல்பாடுகளை கண்டித்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/journalist-petition_1.jpg)
பத்திரிகையாளர்களுக்கு மிரட்டல் விடுத்து ஒருமையில் பேசிய தீட்சிதர்கள்
தரிசன விழாவில் செய்தியாளர்களுக்கு செய்தி சேகரிக்க அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் இருந்தனர். அப்போது வீடியோ, படம் எடுக்கக்கூடாது என தீட்சிதர்கள் செய்தியாளர்களை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் உள்ள இடத்தில் ஒலி பெருக்கி மூலம் அறிவித்து வாக்கு வாதத்தில் நேரடியாக ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்கள் தூரத்திலிருந்து படம் எடுத்தனர். இதற்கு சாமி சிலைகள் வரும் பாதையில் சாமி சிலைகள் தெரியாதவாறு துணியை கட்டினார்கள்.
இதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். அப்போது பக்தர்கள் நடராஜரை தரிசனம் செய்வதற்காகத்தான் வெகுநேரமாக காத்திருக்கிறோம் நீங்க துணியை கட்டி மறைத்தால் நாங்க எப்படி தரிசனம் செய்ய முடியும் என்ற வாக்குவாதத்தில் தீட்சிதர்களிடம் ஈடுபட்டனர். இதனால் தீட்சிதர்கள் அந்தத் துணியை பக்தர்கள் எதிர்ப்பால் விலக்கிக் கொண்டனர். இது குறித்து சிதம்பரம் கோட்டாட்சியர் ரவியிடம் சிதம்பரம் பத்திரிகையாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/natarajar-temple-2_1.jpg)
கரோனா தடுப்பு விதிகளை துளியளவும் கடைபிடிக்காத தீட்சிதர்கள் மற்றும் பக்தர்கள்
கோவில் திருவிழாவிற்கு அதிக அளவு பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனவும் விழாவை கோவிலுக்கு உள்ளே நடத்திகொள்ளலாம் என தமிழக அரசின் உத்திரவின் படி நோய் தொற்று ஏற்படாதவகையில் பாதுகாக்கும் வகையில் சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி தலைமையில் நடைபெற்ற ஒருங்கிணைப்பு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று குறைந்த அளவு பக்தர்களுடன் திருவிழாவை நடத்திக் கொள்ளலாம் என திருவிழாவிற்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் தேர் திருவிழாவில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் தரிசன விழாவில் கோவிலுக்குள் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.
தமிழக அரசு கரோனா மற்றும் ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கையாக கோவிலுக்கு உள்ளே தரிசனம் மற்றும் தேர் திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் மற்றும் தீட்சிதர்கள் கண்டிப்பாக அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தியது. ஆனால் கோவிலில் பக்தர்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டிய தீட்சிதர்கள் ஒருவர்கூட முக கவசம் அணியவில்லை அதேபோல் பக்தர்கள் 95 சதவீமான பேர் முக கவசம் அணியவில்லை. இதனால் சிதம்பரம் நடராஜர் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டவர்களுக்கு பெரும் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என திருவிழாவில் முகக்கவசத்துடன் கலந்துகொண்ட பக்தர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
Follow Us