Skip to main content

நடராஜர் கோயில் ஆயிரம்கால் மண்டபத்தை திருமண மண்டபமாக மாற்றி மரபுகளை மீறும் தீட்சிதர்கள்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள ஆயிரம் கால் மண்டபத்தில் திருமணம் நடத்தி மரபுகளை மீறியுள்ளதாக பக்தர்கள் குற்றம் சாட்டி முகம் சுளித்தனர்..
 

chidambaram

 

 

சிதம்பரம் நடராஜர் கோயில் உலக புகழ் பெற்றது. இக்கோயில் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் தேவாரப்பாடல் பெற்றதலம் ஆகும்.  மேலும் இதனை பூலோக கைலாசம் என்றும் கைலாயம் என்று பக்தர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர. இக்கோயிலுக்கென்று தனி மரபு உள்ளது. இன்று வரை ஆண்கள் நடராஜரை தரிசனம் செய்ய சித்சபைக்கு சென்றால் மேலாடைய கழிற்றி விட்டு அரைநிர்வாணத்தில் தான் செல்ல வேண்டும். இதில் நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த சட்டத்தை கடைபிடித்து வருகிறார்கள். இதே கோயிலில் பல மரபுகள் சார்ந்த சட்டம் உள்ளது.

பல்வேறு மரபுகளை கொண்ட இந்த கோயிலில் 999 கல்தூண்கள் கொண்ட ஒரு மண்டபம் கோயிலுக்கு வடக்கு புறத்தில் உள்ளது. இதில் ஆனித்திருமஞ்சனம் மற்றும் மார்கழி மாதத்தில் நடைப்பெறும் ஆருத்ரா தரிசனம் விழாவின் போது நடராஜர் ஒருகாலை தூக்கிகொண்டு ஒரு காலுடன் நிற்கும் இந்த சிலையை இந்த மண்டபத்தில் வைத்தவுடன் வருடத்தின் நான்கு நாட்களுக்கு இது 1000 கால் மண்டபமாக உள்ளதாக பக்தர்கள் நம்பிக்கை வைத்து வழிபட்டு வருகிறார்கள்.

நடராஜர் இந்த மண்டபத்தில் இருந்து தான் பக்தர்களுக்கு தரிசனம் தரும் நிகழ்ச்சி நடைபெறும். இதனை காண பல லட்சம் பக்தர்கள் ஆண்டுக்கு இருமுறை கூடுவார்கள். இதனால் இந்த மண்டபத்தை ஆண்மீக நிகழ்ச்சிக்கு தவிர மற்ற எந்த நிகழ்ச்சிக்கும் அனுமதி தரமால் பல ஆயிரம் காலம் மரபுகளை காத்து வந்தனர்.

இப்படியுள்ள இந்த மண்டபத்தில் தீட்சிதர்கள் சின்டிகேட் அமைத்து கொண்டு சிவகாசியை சேர்ந்த தீப்பெட்டி தொழிலதிபர் மகளுக்கும், சென்னை பாத்திரகடை தொழிலதிபர் மகனுக்கு திருமணம் செய்ய பல லட்சங்களை கோயிலுக்கென்று வாங்கி கொண்டும், தீட்சிதர்கள் தனித்தனியாக பல லட்சங்களை பெற்றுக்கொண்டு மரபு வாய்ந்த இந்த மண்டபத்தில் திருமணநிகழ்ச்சிக்கு ஒப்புதல் கொடுத்துள்ளதாக பக்கதர்கள் மத்தியில் குற்றச்சாட்டு பரவலாக பேசப்படுகிறது.

அனுமதியை பெற்ற தொழிலதிபர்கள் ஆயிரம்கால் மண்டபத்தை மின் விளக்குள், மலர் தோரணங்கள், வண்ண சீலைகள், பச்சை இலைகளால் நுழைவாயில் தோரணம் என நடராஜர் கோயிலை நட்சித்திர ஓட்டலாக மாற்றினார்கள். உணவு ஏற்பாட்டுக்கு மண்டபத்திற்கு அருகிலே பெரிய கொட்டாகை அமைத்து 200-க்கும் மேற்பட்ட சமையலர்களை கொண்டு அசத்தியுள்ளனர். திருமணம் முடியும் வரை வெளி ஆட்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை, திருமண பேட்ஜ் அணிந்தவர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

புனித இடமான ஆயிரம்கால் மண்டபத்தில் இதுவரை எந்த திருமண விழாவும் நடைப்பெறாத நிலையில் தற்பொழுது திருமணம் நடத்த கோயில் தீட்சிதர்கள் அனுமதி அளித்துள்ளது சிதம்பரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  மேலும் கோயிலில் சமான்யர்களுக்கு ஒரு சட்டம், வசதி படைத்தவர்களுக்கு ஒரு சட்டமா? என முகம் சுளித்து சென்றனர். மேலும் இந்த சம்பவத்தை செல்போனில் படமெடுத்து இதனை கேட்க யாருமில்லையா? என சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். இதனால் சிதம்பரம் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள சிவ பக்தர்களிடம் தீட்சிதர்களின் செயல்பாடு கோயிலின் மரபு மீறிய செயலாக உள்ளதாக பேசப்படுகிறது.

இதுகுறித்து இந்த திருமணத்தை நடத்திவைத்த பட்டு தீட்சிதரை தொடர்புகொண்டு பேசியபோது, “ஆயிரம் கால் மண்டபத்தை திருமணத்திற்கு வாடகை விடவில்லை. அந்த மண்டபத்தில் திருமணம் நடைபெறவில்லை. கோவிலில் கும்பாபிஷேக பணி நடைபெற்றதால் தற்செயலாக அங்கு நடைபெற்றது. யாருக்கும் அங்கு திருமணம் நடத்த அனுமதி இல்லை. சென்னையை சேர்ந்தவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. பொண்ணு, மாப்பிளை பெயர் தெரியாது என இழுத்தார். சரி போனில் பேசவேண்டாம் நேரில் வந்து உங்களிடம் பேசுகிறேன் என்றதுக்கும் மறுத்துவிட்டார், இந்த திருமண நிகழ்வுக்கு கோயில் செகரட்ரியிடம் அனுமதி பெற்றுதான் நடத்தப்பட்டது. இதற்கு பணம் எதுவும் வாங்கவில்லை” என்று மறுத்தார்.

இன்று திருணத்திற்கு பல ஆயிரம் ஆண்டுகால மரபுகளை மீறி அனுமதி அளித்துள்ளனர். கோயிலில் தீட்சிதர்கள் வைத்தது தான் சட்டம் என்று செயல்பட்டு வருவதால் பல்வேறு தவறுகள் வெளியே தெரியாமலே போய்விடுகிறது என்று சிவபக்தர் ஒருவர் காட்டமாக கூறுகிறார். மேலும் கோயில் நிர்வாகத்தை தனி ஐஏஎஸ் அதிகாரியை கொண்டு நிர்வகிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.  

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்