Chidambaram Nataraja temple dikshitars in ongoing controversy; One more case

Advertisment

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குசிதம்பரம் அருகே உள்ள சிவபுரி கிராமத்தைச் சேர்ந்த சிவ பக்தர் கார்வண்ணன் என்பவர் தரிசனம் செய்ய வந்துள்ளார். 61 வயதான இவர் கோவில் 21-ம் படி அருகே சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தபோது கோவில் தீட்சிதர்களான கனக சபாபதி மற்றும் வத்தன் ஆகிய இருவரும் கார்வண்ணனைத் தரக்குறைவாகப் பேசி கீழே தள்ளிவிட்டு மிரட்டியுள்ளனர். இதுகுறித்து கார்வண்ணன், சிதம்பரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் 2 தீட்சிதர்கள் மீதும் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் பலத்த காயம் அடைந்த கார்வண்ணன், சிதம்பரம் அரசு காமராஜர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த கார்வண்ணன், ”தன்மையாக பேச வேண்டும். என் சுயமரியாதைக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். என்னால் எந்த ஒரு இடைஞ்சலும் இல்லாத போது அநாவசியமாக விரட்டுவது, எதேச்சதிகாரமாக நடந்து கொள்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதே மாதிரி தான் அனைவரிடமும் அவர் நடந்து கொள்கிறாரா? அவர் சர்வாதிகாரத்தை காட்டுகிறாரா? அவரது ஆணவத்தை இது வெளிப்படுத்துகிறது” என கூறினார்.

ஏற்கனவே குழந்தை திருமணம், பக்தர்களைத்தாக்கியது, சக தீட்சிதர்களை தாக்கியது என பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில் தற்போது சிவ பக்தரை தாக்கிய புகாரிலும் சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் சிக்கியுள்ளது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

நடராஜர் கோவிலில் திருமஞ்சன தேர்த்திருவிழாவிற்கான கொடியேற்றம் கடந்த வாரம் (17 ஆம் தேதி) நடந்தது. வரும் 25 ஆம் தேதி ஆனி திருமஞ்சன தேர்த் திருவிழாவும், 26 ஆம் தேதி தரிசன விழாவும் நடைபெறுகிறது. இந்த விழாவில் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் சிவ பக்தர்கள் பொதுமக்கள் லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். திருவிழாவிற்கான கோலாகலம் தற்போது ஆரம்பமாகியுள்ள நிலையில் பலரும் வந்து சிதம்பரம் நடராஜரை தரிசித்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.