Skip to main content

தலா 2 செண்ட் வீட்டுமனை பட்டா... கோரிக்கை வைத்து புதிய மாவட்டத்தையும் கேட்ட சிதம்பரம் எம்.எல்.ஏ!

Published on 21/03/2022 | Edited on 21/03/2022

 

jkl

 

தமிழக சட்டப்பேரவையின் 2022- 23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் பேசினார். பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக அரசிடம் அவர் வேண்டுகோள் வைத்தார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது, " சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் சுமார் 200க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநிரந்தரம் செய்திட வேண்டும், ஆன்மீக தலமான சிதம்பரம் நகரில் மகளிருக்கென்று ஒரு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைத்து தர வேண்டும். சிதம்பரம் தொகுதி மீனவ கிராமமான சாமியார்பேட்டை கிராமத்தில் மீனவர்கள் நலனை கருத்தில் கொண்டு தூண்டில் வளைவு திட்டம் அமைக்கவும், சிதம்பரம் நகரில் நீர் நிலைகளில் வீடு கட்டி பல ஆண்டுகளாக குடியிருந்து வந்த ஏழை எளிய மக்களின் குடியிருப்புகள் நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப்பட்டுள்ளது. 

 

அவ்வாறு  வீடு இழந்து தவிக்கும் மக்களுக்கு சிதம்பரம் நகராட்சிக்கு சொந்தமான மணலூர் லால்புரத்தில் உள்ள புல் பண்ணையில் காலியாக உள்ள 47 ஏக்கர் நிலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா இரண்டு சென்ட் வீட்டுமனை பட்டா இலவசமாக வழங்க வேண்டும். சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கடலூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டு உயர்கல்வித் துறையில் இருந்து மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ஒப்படைக்கப்பட்டது. அப்படி ஒப்படைக்கப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் தங்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகளை வெளியிலே வாங்கும் நிலைமை நீடித்து வருகிறது. எனவே இந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை உடனடியாக மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் கொண்டுவந்து பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வகையான உயிர் காக்கும் உயரிய சிகிச்சை வசதிகள் மற்றும் மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கிட வேண்டும்.

 

2019-20 ஆம் ஆண்டிற்கான பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கையில் சிதம்பரம்  வட்டம் திருக்கழிபாலை கிராமம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் அளக்குடி கிராமத்திலேயே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கடல் நீர் உட்புகுதலை தடுக்க தடுப்பு சுவர் அமைக்கப்படும் என்று அன்றைய தமிழக முதல்வர் எடப்பாடியார்  அறிவித்தார்கள். அதைத் தொடர்ந்து இது தொடர்பான ஆய்வு பணிகளுக்காக 94.52 லட்சம் ரூபாய் நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டது. 23.8. 2021 நீர்வளத் துறை மானியக் கோரிக்கை கொள்கை விளக்க குறிப்பில் மேற்கொண்ட  தடுப்பணை அமைப்பதற்கான அனைத்து ஆய்வுகளும் முடிவுற்றது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

எனவே மேற்கண்ட பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.  கடலூர் மாவட்டம் 9 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய பெரிய மாவட்டம். சிதம்பரத்தில் நடராஜர் ஆலயம் அண்ணாமலை பல்கலைக்கழகம் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான பிச்சாவரம் உள்ளது. அரசின் சேவை தொய்வு இல்லாமல் பொதுமக்களுக்கு கிடைக்க செய்ய ஏதுவாக சிதம்பரம் நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டத்தை உருவாக்க வேண்டும். சிதம்பரம் தொகுதி ஆதிவராகநல்லூரில்  வெள்ளாற்றின் குறுக்கே கடல் நீர் உட்புகுதலை தடுக்கும் வகையில் தடுப்பணை ஒன்று அமைத்திட வேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்