
இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கை மே- 17- ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக கரோனா பாதிப்பில் சென்னைக்கு அடுத்த இடத்தில் கடலூர் மாவட்டம் உள்ளது. சென்னை கோயம்பேட்டில் இருந்து வந்தவர்களால் கடலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஊரடங்கு நேரத்தில் பொதுமக்களைப் பாதுகாக்கும் விதத்தில் வீடுகளை மறந்து வெயிலிலும் தெருக்களிலும் நின்று பணி செய்த சிதம்பரம் காவல் உட்கோட்ட பகுதிகளில் உள்ள புவனகிரி, மருவாய், பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம், சிதம்பரம், சிதம்பரம் தாலுக்கா, அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் அனைத்துக் காவலர்கள், ஊர்க்காவல்படையினர், காவல்துறை நண்பர்கள் குழு மற்றும் காவல் அதிகாரிகளின் பணியைப் பாராட்டும் வகையில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ பாண்டியன் அனைவருக்கும் 25 கிலோ அரிசி மூட்டை, மளிகைப் பொருட்கள். காய்கறிகள் உள்ளிட்டவைகளை வழங்கினார்.
நிவாரணப் பொருட்களை வழங்கிய எம்.எல்.ஏ.வுக்கு சிதம்பரம் டி.எஸ்.பி கார்த்திகேயன் தலைமையிலான காவல்துறையினர் நன்றி தெரிவித்து கொண்டார். இதேபோல் ஊரடங்கு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வேலைக்குச் செல்லமுடியாமல் வீட்டில் முடங்கியுள்ள குமராட்சி அருகேயுள்ள சிவாயம், தவர்தாம்பட்டு, வக்காரமாரி, பரங்கிப்பேட்டை, வேளிங்கராயன்பேட்டை, புதுகுப்பம், மீதிகுடி உள்ளிட்ட 10- க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்களுக்குத் தலா 5 கிலோ அரிசி வீதம் வழங்கப்பட்டது.
அரிசிகளை வாங்கிக் கொண்ட கிராம மக்கள் எம்.எல்.ஏ.வுக்கு நன்றி தெரிவித்து கொண்டனர். மேலும் அரிசி ரேசன் கடையில் போடுகிறார்கள். மளிகைப் பொருட்கள் வாங்க முடியாத சூழ்நிலையில் கஞ்சியைக் காய்ச்சிக் குடிக்கிறோம். அரிசிக்குப் பதில் மளிகைப் பொருட்கள் கொடுத்தால் கொஞ்சம் உதவியாக இருக்கும் என்று எம்.எல்.ஏவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.