
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சி. முட்லூரில் அரசு கலைக் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு இரு வேளை பாடப் பிரிவுகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் வேதியியல் பிரிவில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவருக்குக் கடந்த வாரம் கல்லூரியில் பணியாற்றும் ஆய்வக உதவியாளர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இது குறித்து மாணவி கல்லூரி நிர்வாகத்திலும் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனைத் தொடர்ந்து இந்திய மாணவர் சங்கத்தில் மாணவி அளித்த புகாரின் பேரில் இந்திய மாணவர் சங்கத்தினர் சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டது. இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஆய்வக உதவியாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.அதே சமயம் இன்று (17.02.2025) காலை கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகள் 1000க்கும் மேற்பட்டவர்கள் வகுப்பைப் புறக்கணித்தனர்.
அதோடு கல்லூரியில் உட்புகார் கமிட்டி அமைக்க வேண்டும். பாலியல் சீண்டல் மற்றும் வன்கொடுமையில் ஈடுபடும் அனைவர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லூரி நிர்வாகம் சரியான நடவடிக்கை எடுக்காததால் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது. எனவே சம்பந்தப்பட்ட கல்லூரி பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து கோஷங்களை எழுப்பினார்கள். இதுகுறித்து கல்லூரி முதல்வர் அர்ஜுனனுடன் கேட்டபோது கல்லூரியில் உட்புகார் கமிட்டி இருப்பதாகவும் மாணவி சம்பவம் நடந்தபோது வாய்மொழியாகப் புகார் அளித்தார் என்றும் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற அவர் நடவடிக்கை குறித்து வெளியே சொல்ல முடியாது எனக் கூறினார்.