Skip to main content

தண்ணீரில் மிதந்த கல்லூரி... கை கொடுத்த முன்னாள் மாணவர்கள்!

Published on 15/09/2021 | Edited on 15/09/2021

 

 

chidambaram government technology college former students

 

கல்லூரி மழை நீரால் மிதந்ததைக் கண்டு கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் ரூபாய் 4 லட்சம் நிதி திரட்டி கல்லூரி வளாகத்தில் ஒருங்கிணைந்த மழைநீர் சேகரிப்பு விவசாய பண்ணைத் திட்டம் உருவாக்கியுள்ளது அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.

 

சிதம்பரம் நகரத்தையொட்டியுள்ள அண்ணாமலை நகரில் அரசு முத்தையா தொழில் நுட்பக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள இந்த கல்லூரியில் கல்வி பயின்ற மாணவர்கள் உலகளவிலும் பல்வேறு மாநிலங்களிலும், தமிழகத்திலும் அரசு மற்றும் தனியார்த் துறை பணிகளில் சிறந்து விளங்கி வருகிறார்கள். இந்நிலையில் உள்ள கல்லூரி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் கல்லூரி மற்றும் வளாகம் முழுவதும் மழைநீர் முழங்கால் அளவிற்குத் தேங்கி இருந்தது. இதனை உள்ளூரில் வசிக்கும் கல்லூரியில் கல்வி பயின்ற மாணவர்கள் பார்த்து கண் கலங்கி வேதனை அடைந்து கல்லூரியின் நிலைமைக் குறித்து சக மாணவர்களுக்கு சமூகவலைத்தளம் மூலம் பதிவு செய்தனர்.

chidambaram government technology college former students


இதனைத் தொடர்ந்து கல்லூரியில் பயின்ற முன்னாள் கட்டிடவியல்துறை மாணவர்கள் ஒருங்கிணைந்து கல்லூரி வளாகத்தில் நிரந்தரமாகத் தண்ணீர் தேங்காமல் இருக்கத் திட்டங்களைத் தீட்டினர். இதற்குக் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர் அழகரசன் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டு மாணவர்கள் மத்தியில் ரூபாய் 4.2 லட்சம் நிதியைப் பெற்று, இதற்காகத் தனிக்குழுவைக் கொண்டு கல்லூரி மற்றும் வளாகத்தில் உள்ள மழைநீர் வடிகாலைத் தூர் வாரினார்கள். பின்னர் கல்லூரி வளாகத்தில் மழைநீர் தேங்கும் வகையில் பெரிய குளத்தை வெட்டி குளத்தைச் சுற்றி 500- க்கும் மேற்பட்ட தென்னை, ஆலமரம்,மா,பலா,கொய்யா,வேம்பு உள்ளிட்ட மரங்களை நட்டுவைத்து ஒருங்கிணைந்த மழைநீர் சேகரிப்பு விவசாய பண்ணைத்திட்டம் உருவாக்கியுள்ளனர்.

 

குளத்தில் எப்போதும் 2 அடி அளவிற்குத் தண்ணீர் தேங்கிநிற்கும் அதற்கு மேல் தண்ணீர் வந்தால் வெளியேறும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. குளத்தின் வளாகத்தில் கல்லூரி விடுதிக்குத் தேவையான காய்கறி உற்பத்தி, மஞ்சள்,கீரை வகைகளை ஊடுபயிராகப் பயிரிடுதல், மாணவர்களுக்குப் பண்ணை கல்வி கற்பித்தல், தழை உரம் தயாரித்தல், நிலத்தடி நீர்மட்டம் உயர்வு, குளத்தில் மீன் வளர்த்தல், மாணவர்களுக்கு நிலஅளவை களப்பயிற்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களுடன் ஒருங்கிணைந்த விவசாய பண்ணை திட்டங்களாக இந்த இடம் அமைக்கப்பட்டுள்ளது.


 

chidambaram government technology college former students

இதனைப் புதன்கிழமை (செப் 15) மாலை பொறியாளர் தினத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வுக்குழு உறுப்பினர் சீனிவாசன் கலந்துகொண்டு பயன்பாட்டுக்குத் திறந்து வைத்து மரக்கன்றுகளை நட்டுவைத்தார். தானாக முன்வந்து கல்லூரி வளர்ச்சிக்கு நிதியுதவி வழங்கி சிறப்பாக பணியாற்றிய கல்லூரியின் முன்னாள் கட்டிடவியல் மாணவர்களுக்குச் சால்வை அணிவித்து கேடயம் வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தார். இவருடன் முத்தையா அரசு தொழிற்நுட்ப கல்லூரியின் முதல்வர் தனவிஜயன், துணைமுதல்வர் மோகன் உள்ளிட்ட கல்லூரியின் ஆசிரியர்கள், ஊழியர்கள் மாணவர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

 

கல்லூரியில் கல்வி பயின்ற மாணவர்கள் கல்லூரியை மறந்துவிடாமல் கல்லூரியின் வளர்ச்சிக்கு கை கொடுத்த சம்பவம் அனைவர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி கவனத்தையும் ஈர்த்துள்ளது.  
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“சின்னத்தை முடக்க முயற்சிப்பது மோடியின் மோடி மஸ்தான் வேலை” - அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Minister MRK Panneerselvam criticized BJP

தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி இந்தியா கூட்டணியின் சிதம்பரம் மக்களவைத் தொகுதி வேட்பாளரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுதா ஆகியோரை ஆதரித்து சிதம்பரத்தில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

இதற்காக சிதம்பரம் புறவழிச்சாலையில் உள்ள லால்புரம் என்ற இடத்தில் பிரம்மாண்ட மேடை மற்றும் பொதுக்கூட்ட பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வியாழக்கிழமை(28.4.2024) பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொதுக்கூட்ட மேடை அமைய உள்ள இடத்திற்கு வந்த அமைச்சர் பன்னீர்செல்வம், மேடை அமைந்துள்ள பகுதி, தொண்டர்கள் அமர உள்ள இடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை நடந்து சென்று பார்வையிட்டார். அப்போது மேடை அமைக்கும் பணிகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வருகிற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சிதம்பரம் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் தொல். திருமாவளவன், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி வேட்பாளர் உள்ளிட்டோரை ஆதரித்து சிதம்பரத்தை அடுத்த புவனகிரி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட லால்புரம் பகுதியில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். இதில் வாக்காளர்கள், பொதுமக்கள், தொகுதிகளைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் கலந்து கொள்வார்கள். மாநாடு போன்று இந்த கூட்டம் நடைபெற இருக்கிறது.

முதலமைச்சர் நேரடியாகச் சென்று பிரச்சாரம் செய்து வருகிறார். 3 ஆண்டு காலத்தில் செய்துள்ள சாதனைகள், பணிகள் குறித்து முதல்வர் பேசி வருகிறார். சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 75 ஆயிரம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். முந்தைய தேர்தலில் எதிர்க்கட்சியாக இருக்கும்போது மக்களைச் சந்தித்து வாக்கு கேட்டு 39 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறோம். இந்த ஆட்சியில் தனி நபர்கள் பண பலன்களைப் பெற்றுள்ளனர். ஒரு கோடியே 15 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை நேரடியாகச் செல்கிறது. மகளிருக்கு இலவச பேருந்து பயணம், மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் போன்ற திட்டங்கள் எந்த உலகத்திலும் இல்லை. பெண் கல்வியை ஊக்குவிப்பதற்காகக் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு உதவித்தொகை என அனைத்து உதவிகளும் நேரடியாக பயனாளிகளுக்குச் செல்கிறது.

திமுக கூட்டணி கொள்கை உள்ள கூட்டணி. இந்த கூட்டணிக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது. இது 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் கேட்கும் சின்னங்களை முடக்குவதன் மூலமாக அவர்களது வெற்றியை தடுக்க முயற்சிக்கின்றனர். இது மோடியின் மோடி மஸ்தான் வேலை. இது எதிர்க்கட்சிகளை முடக்குவதற்கு செய்கின்ற வேலை. இந்த ஆட்சி இ.டி., சி.பி.ஐ போன்றவற்றை வைத்துக் கொண்டு ஆட்சி புரிகின்றார்கள். ஆனால் தமிழக முதலமைச்சர் மக்கள் நலத்திட்டங்களை செய்து விட்டு, அதை முன்னெடுத்து பிரச்சாரம் செய்து வருகிறார். மக்கள் சக்தியாக ஒன்று திரண்டு வெற்றி பெறச் செய்வார்கள். 100 நாள் வேலைத் திட்டத்தில் கூலியை உயர்த்தியது அவரது பயத்தை காட்டுகிறது. இவற்றையெல்லாம் பார்த்து மக்கள் ஏமாற மாட்டார்கள். திரண்டு வந்து திமுக கூட்டணிக்கு வாக்களிப்பார்கள்” எனக் கூறினார்.

Next Story

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் திருமாவளவன் உள்ளிட்ட 14 பேர் போட்டி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
14 contests including Thirumavalavan in Chidambaram Parliamentary Constituency

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான புதன்கிழமை சிதம்பரம் தொகுதியில் 27 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் அரியலூர் மாவட்ட ஆட்சியருமான ஆணிமேரி ஸ்வர்னா தலைமையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் திமுக கூட்டணி தலைமையில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அதிமுக வேட்பாளர் சந்திரகாசன், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சிராணி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் நீலமேகம், நாடாளும் மக்கள் கட்சியின் வேட்பாளர் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதில் சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் அதிமுக எம்பி சந்திரகாசி மனு நிராகரிக்கப்பட்டது.  மேலும் மாற்று வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட பிரதான கட்சி வேட்பாளராக 6 பேரும் 8  சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இதில் இறுதி வேட்பாளர் பட்டியல் 30-ந்தேதி வெளியிடப்படுகிறது. இன்னும் வேட்பாளர்கள் குறையும் என்று கூறப்படுகிறது.