Skip to main content

சிதம்பரம் தீட்சிதர்கள் குழந்தைத் திருமண விவகாரம்; மருத்துவக்குழு விசாரணை

Published on 06/05/2023 | Edited on 07/05/2023

 

Chidambaram Dikshitar child marriage case; Medical Board Inquiry

 

சிதம்பரத்தில் தீட்சிதர் குடும்பத்தில் குழந்தைத் திருமணம் நடந்தது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மருத்துவக் குழுவினரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

சிதம்பரம் நடராஜர் கோவிலை நிர்வகித்து பூஜை செய்து வரும் தீட்சிதர்கள் குடும்பத்தில் பால்ய விவாகம் எனப்படும் குழந்தைகள் திருமணம் நடப்பதாக தொடர்ந்து தமிழக அரசுக்கு புகார்கள் வந்தன. இதுதொடர்பாக சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் உரிய விசாரணை நடத்தி சில வழக்குகளை பதிவு செய்தனர். அந்த வழக்கு தொடர்பாக சிலர் கைதும் செய்யப்பட்டனர். இதில் குழந்தை திருமணம் நடைபெற்றதாக கூறப்படும் சிறுமிக்கு இரு விரல் பரிசோதனை செய்யப்பட்டதாகவும் அவ்வாறு செய்தது தவறு எனவும், சமீபத்தில் தமிழக ஆளுநர் கூறியது சர்ச்சை ஆனது. இதுதொடர்பாக இன்று சிதம்பரத்தில் மருத்துவக் குழுவினர் விசாரணை நடத்தினர்.

 

மருத்துவத்துறை கூடுதல் இயக்குநர் விஸ்வநாதன், கடலூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் ரமேஷ்பாபு, கடலூர் மகப்பேறு மருத்துவர் பரமேஸ்வரி, சென்னை கூடுதல் கண்காணிப்பாளர் கமலக்கண்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர் இன்று சிதம்பரம் வந்தனர். பின்னர் அவர்கள் சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குச் சென்று வழக்கு குறித்து கேட்டறிந்தனர். இதையடுத்து இந்த வழக்குகள் தொடர்பாக சிதம்பரம் ஏஎஸ்பி ரகுபதியிடம் மருத்துவக் குழுவினர் ஆலோசனை நடத்தி விசாரித்தனர். அப்போது மருத்துவ குழுவினர் ஏஎஸ்பியிடம் குழந்தை திருமணம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்ட விபரங்களை கேட்டறிந்து, அந்த வழக்குகளில் எந்தவிதமான மருத்துவப் பரிசோதனைகள் நடந்தது. எந்த மருத்துவமனையில் இந்த சோதனைகள் நடைபெற்றன என்பது குறித்தும் கேட்டறிந்தனர்.

 

மேலும் இந்த விசாரணைக்கு ஒத்துழைக்கும்படியும் காவல்துறை அதிகாரியிடம் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து மருத்துவக் குழுவினர் கடலூர் புறப்பட்டுச் சென்றுவிட்டனர். தீட்சிதர்கள் குடும்பத்தில் நடந்த குழந்தைத் திருமணம் தொடர்பாக மருத்துவக் குழுவினர் தற்போது விசாரணை நடத்தி இருப்பது சிதம்பரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“நடவடிக்கை எடுப்பதுபோல் பாவலா....” - தமிழக அரசுக்கு இ.பி.எஸ் கண்டனம்

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
EPS condemns the Tamil Nadu government

இந்தியாவிலேயே போதைப் பொருள் கடத்தலில் முதன்மை மாநிலமாக தமிழகத்தை உருவாக்கியுள்ளதாகக் கூறி தமிழக அரசுக்கு அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “விடிய விடிய இராமாயணம் கேட்டுவிட்டு, சீதைக்கு இராமன் சித்தப்பா என்பதுபோல், கடந்த மூன்றாண்டு கால மக்கள் விரோத திமுக அரசின் அவலங்களை எடுத்துச் சொன்னால், நானே முதல்வன், நான் ஆளும் மாநிலமே நாட்டில் முதன்மை மாநிலம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புலம்பி வருகிறார். ஒரு சிறந்த ஆட்சியாளர்கள் என்றால், தாங்கள் செய்த சாதனைகளையும், மற்ற மாநிலங்களில் அந்தந்த அரசுகள் செய்யும் சாதனைகளையும் ஒப்பிட்டுப் பார்ப்பது ஏற்கக்கூடிய ஒன்றாகும். மக்களின் விதிப் பயனால் நமக்கு கிடைத்துள்ள முதலமைச்சர் போதைப் பொருள் புழக்கம் மற்றும் போதைப் பொருள் கடத்தல் சம்பவங்களில் குஜராத்தோடும், அஸ்ஸாமோடும், மற்ற வட மாநிலங்களோடும் தமிழகத்தை ஒப்பிட்டுத் தனக்குத்தானே ஒரு பொய்மைத் தோற்றத்தை உருவாக்கி வருகிறார். இந்த திமுக அரசின் ஆட்சியாளர்கள், தங்கள் கட்சியில் நியமித்த அயலக அணி நிர்வாகிதான் வட மாநிலங்களில் இருந்து தமிழகம் வழியாக வெளிநாடுகளுக்கு போதைப் பொருட்களை கடத்தி இருக்கிறார் என்ற உண்மையை மறைக்க தலைகீழாக நின்று தண்ணீர் குடித்து வருகிறார்கள்.

இரண்டாயிரம் கோடி ரூபாய் போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் தங்கள் கட்சியினர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித பதிலோ, மறுப்போ நேரடியாக தெரிவிக்காத முதலமைச்சர், பிரச்சனைகளை திசை திருப்பும் விதமாக அ.தி.மு.க ஆட்சியில் மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்ற பொய் பரப்புரையை தனது சுற்றுப்பயணத்தின் போதும், ஊடக விளம்பரங்கள் மூலமும் கட்டவிழ்த்துவிடுவது எள்ளி நகையாடக்கூடியதாக இருக்கிறது. தமிழ்நாட்டில் போதைப் பொருள் புழக்கமோ, கடத்தலோ, விற்பனையோ இந்த திமுக அரசின் காவல்துறையினரால் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் இல்லை. மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவுதான் அந்தப் பணியைச் செய்து வருகிறது. திமுக அரசு ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து, தமிழ் நாட்டில் போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்துக்கொண்டே இருப்பதை, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் பலமுறை சட்டமன்றப் 

பேரவையில் எடுத்துரைத்ததோடு, காவல்துறை மானியக் கோரிக்கையிலேயே பள்ளி மற்றும் கல்லூரிகள் அருகில் கஞ்சா விற்பனை தொடர்பாக 2138 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 148 குற்றவாளிகள் மட்டுமே கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதற்கு எனது ஆச்சரியத்தையும், வழக்குகளின் எண்ணிக்கைக்கும், கைதானவர்களின் எண்ணிக்கைக்கும் மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசத்தை சுட்டிக்காட்டி சுமார் 2000 பேர் கைதாகாமல் தப்பியது எப்படி என்று சட்டமன்றத்திலேயே கேள்வி எழுப்பியிருந்தேன். அதற்கு, இதுவரை மவுன சாமியார் வேடமிடும் இந்த ஆட்சியாளர்கள் பதிலளிக்கவில்லை. தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்தத் தவறிய இந்த திமுக அரசைக் கண்டித்து அ.தி.மு.க சார்பில் தொடர்ச்சியான போராட்டங்கள், கண்டன ஆர்ப்பாட்டங்கள், மனித சங்கிலிப் போராட்டங்கள், அறிக்கைகள் என்று அ.தி.மு.க தமிழக இளைஞர்களையும், மாணவர்களையும் போதைப் பழக்கத்தில் இருந்து காப்பாற்ற தொடர்ந்து களத்தில் நின்று போராடி வருகிறது.

மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு, நூற்றுக்கணக்கான கிலோ கணக்கில் போதைப் பொருள் தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருளான மெத்தம்பெட்டமைன் மற்றும் போதைப் பொருட்களை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட நபர்களைக் கைது செய்தபின் தன்னுடைய ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற பயத்தில் தானும் நடவடிக்கை எடுப்பதுபோல் ஒரு பாவலாவை இந்த ஆட்சியாளர்கள் காட்டியிருக்கிறார்கள். 100 கிராம், 200 கிராம் என்ற அளவில் போதை மாத்திரைகள் மற்றும் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும், 29 நாட்களில் 402 பேர் கைது என்று செய்திக் குறிப்பை காவல்துறை வெளியிட்டிருக்கிறது. மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் நடவடிக்கைகளுக்கு முன்புவரை இந்த 402 பேர் சுதந்திரமாக போதைப் பொருள் வியாபாரம் செய்ய அனுமதி அளித்தது யார்? மேலும், இதுபோன்ற சிறு சிறு குற்றவாளிகளை கைது செய்வதைப் போல், போதைப் பொருள் வியாபாரத்தின் ஆணிவேரை கைது செய்ய இதுவரை இந்த அரசு எடுத்த நடவடிக்கை என்ன?

ஒரு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் திமுக அரசின் முதலமைச்சர், மனித சங்கிலிப் போராட்டம் ஒரு நாடகம் என்று சொன்னதாக நேற்று ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பறிமுதல் செய்த போதைப் பொருட்கள், திமுக நிர்வாகி கைது மற்றும் சம்பந்தப்பட்ட காவல்துறையினரின் பேட்டி போன்றவை நடைபெறவில்லை என்று முதலமைச்சர் நினைக்கிறாரா? மேலும், போதைப் பொருள் கடத்தல் குறித்து நாங்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு பதிலளிக்காத இந்த திமுக அரசு, இனியாவது தூக்கத்திலிருந்து விழித்து தமிழகத்தில் நிலைமை என்ன என்று கூர்ந்து கவனித்து உடனடி நடவடிக்கை எடுக்க இந்த திமுக அரசை வலியுறுத்துகிறேன். அ.தி.மு.க நடத்திவரும் ‘போதைப் பொருள் இல்லாத தமிழகம்’ என்ற உன்னதப் போராட்டங்களுக்கு மாபெரும் ஆதரவு அளித்து வரும் தமிழக மக்கள், தமிழ் நாட்டை போதைப் பொருள் கேந்திரமாக மாற்றிய இந்த மக்கள் விரோத திமுக-விற்கு, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். 

Next Story

‘முன்னாள் ராணுவ வீரர்கள் கவனத்திற்கு’ - தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
 Tamil Nadu Govt announced Ex-Servicemen Tax Concession

கடந்த பிப்ரவரி மாதம், தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் வெளியிட்ட நிதிநிலை அறிக்கையில், ‘கைம்பெண்கள், போரில் ஊனமுற்ற வீரர்கள் உள்ளிட்ட சிலருக்கு மட்டும் அளிக்கப்பட்டு வரும் சொத்து வரி மற்றும் வீட்டு வரி இவற்றின் வரிச்சலுகையானது தற்போது, அனைத்து முன்னாள் ராணுவ வீரர்களுக்கும் வழங்கப்படும் வகையில் ஆணை பிறப்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், இந்த திட்டத்தை செயல்படுத்தும் விதமாக, தமிழ்நாடு அரசு இன்று (13-03-24) அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, ‘நடப்பு நிதியாண்டில் இருந்து அனைத்து முன்னாள் ராணுவ வீரர்களுக்கும் சொத்து வரி, வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும். இந்த விலக்குகளை பெற இந்த ஐந்து நிபந்தனைக்குள் இடம்பெற வேண்டும். முன்னாள், ராணுவ வீரர்கள் நிரந்தரமாக தமிழகத்தில் குடியிருப்பவராக வேண்டும். முன்னாள் ராணுவ வீரர்கள் குடியிருக்கும் கட்டடத்துக்கு மட்டும் இச்சலுகை வழங்கப்படும்.

அவர்கள் வருமான வரி செலுத்துபவராக இருக்கக் கூடாது. ராணுவ வீரர்கள், தங்களுடைய பணியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு மறுவேலைவாய்ப்பு திட்டத்தில் மத்திய அல்லது மாநில அரசின் பணியில் வேலை செய்பவராக இருக்கக்கூடாது. மறுவேலைவாய்ப்பில் ஓய்வுபெற்று ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு இச்சலுகை பொருந்தாது.  இந்த திட்டத்தின் மூலம், 1.20 லட்சத்துக்கும் அதிகமான முன்னாள் ராணுவ வீரர்கள் பயன்பெறுவார்கள்’ என்று தெரிவித்துள்ளது.