ADVERTISEMENT

ராஜா முத்தையா மருத்துவமனை கரோனா சிறப்பு வார்டில் 245 பெட் தயார்... மருத்துவ கண்காணிப்பாளர் தகவல்

05:44 PM Apr 25, 2020 | rajavel

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக கட்டுபாட்டில் இருந்த ராஜா முத்தையா மருத்துவகல்லூரி மருத்துவமனையை, தற்போது நடைபெற்ற சட்டமன்ற கூட்டதொடரில் கடலூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரியாக அரசு அறிவித்தது. அதனை தொடர்ந்து அங்கு கரோனா தொற்றுக்கான சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு பல்வேறு கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT



இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்ட அனைவரையும் இங்கு அழைத்து வந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்ட 26 பேரும் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் தற்போது 18 பேர் வீடு திரும்பியுள்ளனர். மீதி 8 பேர் மட்டுமே சிறப்பு வார்டில் உள்ளனர்.

ADVERTISEMENT



இதுகுறித்து மருத்துவக்கல்லூரி மருத்துவ கண்காணிப்பாளர் சண்முகம் கூறுகையில், தற்போது அரசு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளவர்களை கண்காணிக்கும் வார்டுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளது. 7 வென்டிலேட்டர் ஒதுக்கீடு செய்து தற்போது 2 வந்துள்ளது. இதனை அவசர சிகிச்சை மற்றும் வார்டு பகுதியில் வைத்துள்ளோம், விரைவில் 5 வரவுள்ளது. அதேபோல் கடலூர் மாவட்டத்தில் தொற்று சம்பந்தமாக எடுக்கப்படும் ஆய்வு முடிவுகள் விழுப்புரம் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு, முடிவுகள் வருவதற்கு இரண்டு முதல் மூன்று நாட்கள் ஆனது, இதனால் சிரமம் இருந்து வந்தது.

இதனைதொடர்ந்து இந்த மருத்துவமனையிலே ஆய்வு மேற்கொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் அனுமதியுடன் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் தொகுதி மேம்பாட்டு நிதியில், ரூ 32.63 லட்சம் பெற்று தொற்று கண்டறியும் கருவி வாங்கப்பட்டது. அதில் தற்போது கடலூர் மாவட்டம் முழுவதும் எடுக்கப்படும் சேம்பில் கொண்டு முடிவுகளை துல்லியமாக அறிவித்து வருகிறோம். கடந்த மூன்று நாட்களாக பாசிட்டிவ் கேஸ் இல்லை.

மேலும் இந்த மருத்துவமனையில் மருத்துவர்கள் 196 பேர், பி.ஜி. மருத்துவர்கள் 245, சி.ஆர்.ஐ. மருத்துவர்கள் 325 பேர், நர்சுகள் 275 பேர், கடைநிலை ஊழியர்கள் 140 பேர் உள்ளிட்ட 1800 பேர் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஷிப்டு முறையில் பணியாற்றி வருகிறார்கள்.

கரோனா சிறப்பு வார்டில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் என அனைவருக்கும் முழுகவச உடை வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் 6 நாட்கள் வேலை பார்த்தால் இருவாரம் ஓய்வுக்கு பின்னர் அவர்களை கரோனா தொற்று சோதனை செய்து மீண்டும் பணிக்கு அனுமதிக்கப்படுகிறது.

கரோனா தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு காலையில், முதலில் கபசுரக் குடிநீர், பின்னர் இட்லி சாம்பார். மதியம் தக்காளி, எலுமிச்சை சாதம், முட்டை, மாலையில் சுண்டல், இரவு சப்பாத்தி குருமா, ரவா கிச்சடி உணவுகள் வழங்கப்படுகிறது. மேலும் ஹைட்ராக்சிகுளோரோகுயின், அசித்ரோமைசின், சிங்க் வகை மாத்திரைகள் வழங்கப்படுகிறது.

மருத்துவமனையில் தற்போது கரோனா தொற்றுக்காக 245 பெட் தயார் நிலையில் உள்ளது. திடீர் என்று அதிக தொற்று வந்தால் சமாளிப்பதற்காக மருத்துவர்கள் உள்ளிட்ட அனைத்து வகை ஊழியர்களையும் ஓய்வில் தனிமை படுத்தி வைத்துள்ளோம்.

நோய் தொற்று பாதிக்கப்பட்ட இடத்திலிருந்து அச்சத்தின் காரணமாக வருபவர்களை தனிமைப்படுத்த தனித்தனியாக பல்கலைக்கழக பொறியியல் துறையில் உள்ள கட்டிடத்தில் அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. 48 மணி நேரத்தில் மருத்துவமனை உள்ளிட்ட சிறப்பு வார்டுகளை கண்காணிக்கும் வகையில் அதிநவீன வசதிகளுடன் 32 கண்காணிப்பு கேமராக்களை அரசு நிறுவியுள்ளது. இதனால் என் அறையில் இருந்தே கரோனா தொற்று நோயாளிகள் உள்ள வார்டில் என்ன நடக்கிறது. என்று கண்காணிக்க முடிகிறது.

அங்கு நோயாளிகள் கூட்டமாகவும், முக கவசம் இல்லாமல் இருந்தால் முக கவசம் போடுவதற்கு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் கரோனா தொற்று நோயாளிகள் வெளியே செல்லாமலும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வரப்படுகிறது. பொதுமக்களுக்கு யாருக்கும் இந்த தொற்று வரமால் இருக்க அதிகளவில் வெளியில் வரவேண்டாம். தற்போதுள்ள நிலைமாற்றப்பட்டால் அதிக தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் கூறினார். இவருடன் குழந்தைகள் நல மருத்துத்துறை தலைவர் மருத்துவர் ராமநாதன் உள்ளிட்ட மருத்துவர்கள் உடன் இருந்தனர்.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT