publive-image

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில் சிதம்பரம் நகரம் சீர்மிகு நகரமாக மாற்றிடும் வகையில் மேற்கொள்ளவேண்டிய வளர்ச்சிப் பணிகள் குறித்த கருத்துக் கேட்பு கூட்டம் இன்று (26/03/2022) நடைபெற்றது.

Advertisment

இக்கூட்டத்திற்கு தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். இதில் சிதம்பரம் வர்த்தக சங்கத் தலைவர் சதீஷ்குமார், ஓட்டல் வியாபாரிகள் சங்கம் சார்பில் மூசா, நகை வியாபாரிகள் சங்கம் சார்பில் ராமநாதன், மூத்த வழக்கறிஞர் சம்பந்தம், வீனஸ் பள்ளி குழுமத்தின் தாளாளர் வீனஸ்குமார் உள்ளிட்ட சிதம்பரம் பகுதியில் உள்ள சமூக நல அமைப்புகளைச் சேர்ந்த சங்க நிர்வாகிகள், கலந்துக் கொண்டு சிதம்பரம் நகரம் சீர்மிகு நகரமாக மாற்றுவது குறித்து ஆலோசனைகளை வழங்கினார்கள்.

Advertisment

கூட்டத்தில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், "சிதம்பரம் நகரத்தில் உள்ள சாலைகள், மின் விளக்குகள், பாதாள சாக்கடை திட்டம், குடிநீரில் சாக்கடை கலப்பு உள்ளிட்டப் பிரச்சனைகளை போர் கால அடிப்படையில் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் விதமாக நகரின் மைய பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தை புறவழி சாலை பகுதியில் மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரபடுகிறது.

சிதம்பரம் அண்ணாமலை நகர் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு ரூபாய் 127 கோடி பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. புளிச்சமேடு சுடுகாடு மின்மயான சுடுகாடக மாற்றுவதற்கு நிதி வந்துள்ளது. விரைவில் அதற்கான பணிகள் நடைபெறும். சிதம்பரம் விரைவில் சீர்மிகு நகரமாக மாற்றப்படும்" என்றார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம், கூடுதல் ஆட்சியர்கள் ரஞ்சித்சிங், பவன்குமார் கிரியப்பனார், சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி, சிதம்பரம் நகர் மன்றத் தலைவர் செந்தில்குமார், துணைத்தலைவர் முத்துகுமரன், நகராட்சி ஆணையர் அஜிதாபர்வின் உள்ளிட்ட 33 வார்டு உறுப்பினர்கள். நகரின் முக்கிய பிரமுகர்கள் கலந்துக் கொண்டனர்.