Skip to main content

சிதம்பரம் ஆரூத்ரா தரிசன விழாவில் பிறமாவட்ட பக்தர்களுக்கும் அனுமதி!

Published on 27/12/2020 | Edited on 27/12/2020

 

Chidambaram Arudra Darshan festival allowed for other district devotees!

 

சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழாவில் பிற மாவட்ட பக்தர்களையும் அனுமதிக்க வேண்டும் என, கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

சிதம்பரம் நடராஜர் கோவிலில்,  டிசம்பர் 28-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை மார்கழி ஆருத்ரா தரிசன மகோத்சவம் நடைபெற உள்ளது. ஆனால், இந்த உற்சவத்தில் கடலூர் மாவட்டம் தவிர, பிற மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதியில்லை என கடலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

 

கடந்த 21-ம் தேதி மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த விஷ்ணுதாஸ் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

 

இந்த வழக்கு,  நீதிபதிகள் மகாதேவன் மற்றும் அனிதா சுமந்த் அமர்வில் சிறப்பு வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,  ‘பிற மாவட்ட பக்தர்களுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிப்பதற்கு பதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உதவியுடன்,  தனிமனித விலகல் நடைமுறைகளைப் பின்பற்றி கூட்டத்தை முறைப்படுத்துவது குறித்து பரிசீலிக்கலாம். ஏற்கனவே, பிற மாவட்டங்களுக்குப் பயணிக்க பின்பற்றப்பட்ட,  இ–பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.  ஊரடங்கு தளர்வுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால், பிற மாவட்ட மற்றும் பிற மாநில பக்தர்களுக்கு,  தனிமனித விலகல் உள்ளிட்ட விதிகளைப் பின்பற்றி, ஆருத்ரா தரிசன மகோத்சவ நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கும்படி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும்.’ என வாதிட்டார். 

 

தமிழக அரசுத்தரப்பில், ‘கரோனா பரவல் சூழலைக் கருத்தில் கொண்டு, பக்தர்களின் பாதுகாப்புக்காகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் மட்டுமே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பக்தர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் நோக்கம் ஏதும் அரசுக்கு இல்லை.’எனத் தெரிவிக்கப்பட்டது.

 

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்,  ‘மாநிலங்களுக்கு இடையிலும், மாநிலத்திற்குள்ளும்,  மக்கள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், மத விவகாரங்களில் காரணமற்ற கட்டுப்பாடுகள் விதிக்க முடியாது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடைபெற உள்ள ஆருத்ரா தரிசனத்திற்கு அனைத்து பக்தர்களையும் அனுமதிக்க வேண்டும்.  

 

மேலும், மாவட்ட ஆட்சியரின் கடிதத்தில் கூறியுள்ளபடி, பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரையிலும், 4.30 மணி முதல் 5.30 மணி வரையிலும், 6 முதல் 7 மணி வரையிலும்,  தலா 200 பக்தர்கள் வீதம்,  முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அனுமதிக்க வேண்டும். பக்தர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை செய்ய வேண்டும். வெப்பநிலை அதிகமாக இருக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்டவர்களுக்கு கரோனா பரிசோதனை நடத்தி, கரோனா அறிகுறி இல்லாவிட்டால் அனுமதி வழங்க வேண்டும்.  

 

அனைத்து பக்தர்களும் முகக்கவசம் அணிய வேண்டும். கரோனா பரிசோதனை சான்று கட்டாயமில்லை. திறந்த வெளியில் 50 சதவீதம் பேர் கூட அனுமதியளித்த மத்திய அரசின் உத்தரவுகளைப் பின்பற்ற வேண்டும்.’  என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரோன்கள் கண்காணிப்பில் வெள்ளியங்கிரி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Drones are the key to surveillance

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர். மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர்.

அண்மையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞரும், சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கிரண் என்ற இளைஞரும் மலையேறும் போதே மூச்சுத்திணறி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 25 ஆம் தேதி தெலுங்கானாவைச் சேர்ந்த சுப்பாராவ் (வயது 68). மருத்துவரான இவர் நான்காவது மலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதேபோல் சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் குரங்கு பாலம் என்ற பகுதியில் மயங்கி விழுந்து இறந்து போனார். மேலும் 26 ஆம் தேதி நான்கு மணி அளவில் மலையில் ஏறிக் கொண்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரும் மூச்சுத்திணறி உயிரிழந்தார். அதேபோல் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய ரகுராம் (வயது 50) என்பவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இப்படியாக வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இன்று சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வெள்ளியங்கிரியில் மலையேறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் வனத்துறை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தற்போது கோடை காலம் என்பதால் காட்டுத்தீ ஏற்படும் சூழ்நிலைகளும் உருவாகியுள்ளது. பக்தர்கள் மலையேறுவதற்கான பாதையைத் தவிர்த்து வேறு பாதையைப் பயன்படுத்திவிடாமல் இருக்க கண்காணிக்கப்படுவதாற்காக ட்ரோன்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று காலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாரை சாரையாக மலையேற தொடங்கி வரும் நிலையில் சுழற்சி முறையில் தற்போது ட்ரோன்கள் மூலம் பக்தர்களின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Next Story

கள்ளழகர் திருவிழாவில் நிகழ்ந்த சோகம்; போலீசார் தீவிர விசாரணை!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy at the Kalalhagar festival Police serious investigation

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர்.  தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம் வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இதனையடுத்து மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அழகருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். 

Tragedy at the Kalalhagar festival Police serious investigation

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவில் இளைஞர்கள் பட்டாக்கத்தியுடன் மோதிக்கொண்டதில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். சித்திரைத் திருவிழா நடந்த மதுரை மாவட்டம் ஆழ்வார்புரம் பகுதியில் ஏற்பட்ட மோதலில் கத்தியால் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் ஆழ்வார்புரத்தைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் சிவகங்கையைச் சேர்ந்த சோனையை மர்ம நபர்கள் கத்தியால் குத்தினர். இதனையடுத்து மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவம் குறித்து மதுரை மாநகர போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.