Skip to main content

4 -வது நாளாகத் தீவிரமடையும் மருத்துவ மாணவர்களின் போராட்டம்!

Published on 12/12/2020 | Edited on 12/12/2020

 

Chidambaram annamalai university raja muthiah medical students

 

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பிற அரசு மருத்துவக் கல்லூரிக்கு இணையான கல்விக் கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என மாணவர்கள் தொடர்ந்து 4-வது நாளாக அறவழியில் போராட்டம் நடத்திவருகின்றனர். 

 

இக்கல்லூரியில் முதுகலை மருத்துவ மாணவர்களின் கல்விக் கட்டணமாக ரூ.9.6 லட்சம் மற்றும் இளங்கலை மருத்துவக் கல்விக் கட்டணமாக ரூ.5.5 லட்சம் என அரசு நிர்ணயம் செய்துள்ளது. அதேபோல், முதுகலை பல் மருத்துவம் ரூ.8 லட்சமும், இளங்கலைக்கு ரூ.3.5 லட்சமும் வசூலிக்கப்படுகிறது. 

 

அரசு இதனை, கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியாக அறிவித்த பிறகும், தனியார் கட்டணத்தைவிட அதிக கல்விக் கட்டணம், வசூலிக்கப்படுவதைக் கண்டித்து இதற்கு முன்னரே பல்வேறு கவன ஈர்ப்புப் போராட்டங்களை நடத்தியும், எந்த ஒரு தீர்வும் கிடைக்கப்பெறாததால், கடந்த 4 நாட்களாகத் தொடர் போராட்டங்களை, அனைத்து மருத்துவ மாணவர்களும், நோயாளிகளுக்குப் பாதிப்பு இல்லாமல் சமூக இடைவெளியைப் பின்பற்றி, அறவழியில் போராடி வருகின்றனர். மூன்றாவது நாளில் மொபைல் டார்ச்லைட் வெளிச்சத்தில் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 4ஆம் நாளில் மதிய உணவு இடைவெளியின்போது கறுப்புப் பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

தமிழக முதல்வர், மருத்துவ மாணவர்களின் நலன் காக்க  உடனடியாகத்  தலையிட்டு,  பிற அரசு மருத்துவக் கல்லூரிக்கு இணையான கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் எனக் கோஷங்களை எழுப்பினார்கள். மாணவர்களின் போராட்டம் தொடர் போராட்டமாக தீவிரமடைந்து வருகிறது. தமிழக அரசும் பல்கலைக்கழக நிர்வாகமும் கண்டுகொள்ளவில்லை. மாணவர்களின் நலனைப் பாதுகாக்காமல் பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களை உங்கள் மார்க் எங்க கையில் உள்ளது என்று மிரட்டி வருவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் தெரிவிக்கின்றனர். இதனையும் மீறி மாணவர்கள், தொடர் போராட்டத்தைப் பல்வேறு வடிவங்களில் செயல்படுத்தி வருகிறார்கள். சரியான நடவடிக்கை இல்லையென்றால், பல்கலைக்கழக அனைத்து மாணவர்களையும் ஒருங்கிணைத்துப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உயிரற்ற சடலங்களுக்கு இவ்வளவு மதிப்பா? மாற்றி யோசித்த கேரள அரசு!

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Kerala earned revenue by selling corpses

கேரளாவில் அரசு மருத்துவமனைகளில், பிணவறையில் கேட்பாரற்றுக் கிடந்த சடலங்களை விற்றதன் மூலம் கேரள அரசு 3 கோடி ரூபாய் வருவாய் ஈட்டிள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கேரள மாநிலத்தில் அரசு மருத்துவமனைகளின் பிணவறைகளில் கேட்பாரற்று கிடந்த சடலங்களை 2008 ஆம் ஆண்டு முதல் கேரளா அரசு விற்பனை செய்துள்ளது. மொத்தமாக 1,122 சடலங்களை தனியார் கல்லூரிகளுக்கு கேரள அரசு வழங்கியுள்ளது. மருத்துவ மாணவர்களுக்கு நேரடி பயிற்சி அளிக்க மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு மாதிரிகளாக வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் மட்டும் அதிகபட்சமாக கடந்த 11 ஆண்டுகளில் கேட்பாரற்ற 599 சடலங்களை மருத்துவக் கல்லூரிகளுக்கு கேரள அரசு வழங்கியுள்ளது.

பதப்படுத்தி வைக்கப்பட்ட சடலம் ஒன்றுக்கு 40,000 ரூபாயும், பதப்படுத்தப்படாத சடலம் ஒன்றுக்கு 20,000 ரூபாயும் என கேரள அரசு வசூலித்துள்ளது. இதில் மொத்தமாக  3.66 கோடி ரூபாய் கேரள அரசு வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பாலியல் சமத்துவ பயிற்சி பட்டறை

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Gender Equality Workshop at Annamalai University

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து பாலியல் சமத்துவத்தைப் பற்றிய 3 நாட்கள் பயிற்சி பட்டறை பல்கலைக்கழக மக்களியல் துறையில் நடைபெற்றது. மக்களியல் துறை உதவிப் பேராசிரியர் க. மகேஸ்வரி அனைவரையும் வரவேற்றார். கலைப்புல தலைவர் விஜயராணி தலைமை தாங்கிப் பேசினார். துறைத் தலைவர் ரவிசங்கர் பயிற்சி பட்டறை பற்றிய தொகுப்பு உரையாற்றினார்.

சிறப்பு விருந்தினராக அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆளவை மன்ற உறுப்பினர் பேராசிரியர் அரங்க பாரி, ராஜீவ்காந்தி தேசிய மேம்பாட்டு நிறுவனத்தின் பேராசிரியர் வசந்தி ராஜேந்திரன், சிதம்பரம் வட்டாட்சியர் ஹேமா ஆனந்தி ஆகியோர் கலந்து கொண்டு மாணவ - மாணவிகளுக்குப் பாலியல் சமத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். இதில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவ - மாணவியர்கள் மற்றும் அதன் உறுப்பு கல்லூரி மாணவ - மாணவியர்கள் 100 பேர் கலந்து கொண்டனர். மக்களியல் துறை இணைப் பேராசிரியர் பீமலதா தேவி நன்றியுரை வழங்கினார்.