Skip to main content

அண்ணாமலைப் பல்கலைக்கழக பணி நிரவல் ஊழியர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை பெற்று தர சார் ஆட்சியரிடம் மனு!

Published on 19/07/2021 | Edited on 19/07/2021

 

 

chidambaram annamalai university employees election


கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக அனைத்து ஊழியர் சங்க நிர்வாகிகள் மற்றும் பல்கலைக்கழக ஊழியர்கள், முன்னாள் ஊழியர் சங்கத்தின் பொதுசெயலாளர் ரவி தலைமையில், பொறுப்பாளர்கள் சியாம்சுந்தர், ஜான், மற்றும் நிர்வாகிகள் தேவேந்திரன், கனக சித்தன், தமிழ்ச்செல்வன், கந்தசாமி ஆகியோர் சிதம்பரம் சிதம்பரம் சார் ஆட்சியர்  மதுபாலனை சந்தித்து மனு அளித்தனர்.

 

அதில், "அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தேர்தல் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் வரும் செப்டம்பர் மாதம் இந்த தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் 3,699 ஊழியர்களும், மருத்துவத்துறையில் 1,225 ஊழியர்களும், பணி நிரவலில் அரசின் பலதுறைகளில் சுமார் 4160 ஊழியர்கள் என தமிழகம் முழுவதும் பணியாற்றி வருகின்றனர். 

 

கடந்த 2015- ஆம் ஆண்டு வரை நடைபெற்ற சங்கத் தேர்தல்களில் அனைத்து ஊழியர்களும் வாக்களித்து வந்த நிலையில், 2018- ஆம் ஆண்டு நடைபெற்ற ஊழியர் சங்கத்தேர்தலில், அப்போது பொறுப்பில் இருந்த சங்க பொறுப்பாளர்கள் சுயநலத்தோடு செயல்பட்டு, பணி நிரவலில் சென்ற ஊழியர்களுக்கு வாக்குரிமை இல்லை என்றும் தேர்தலுக்கு முன்பாக நடைபெற்ற சங்கப் பொதுக்குழுவில் ஒருதலைபட்சமாக அறிவித்து தேர்தலை நடத்திவிட்டனர்.

 

அரசின் பலதுறைகளில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள், அங்குள்ள ஊழியர் சங்கங்களில் உறுப்பினர்களாக சேரஅனுமதிக்கப்படுவதில்லை. அவ்வாறு அனுமதிக்காததால் அரசு வழங்கும் நியாயமான சலுகைகளை கூட கேட்டுப் பெற அலைக்கழிக்கப்படுகின்றனர்.

 

மேலும் பணி நிரவல் ஊழியர்களின் பிஎஃப், சி.பி.எஸ்.,இ.எஸ்.ஐ.,சந்தா தொகை மற்றும் கடன் தொகை பிடித்தம் போன்ற அனைத்தும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலேயே பராமரிக்கப்பட்டு வருகிறது.  இதுபோன்ற சூழலில் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் சார்ந்தக் கோரிக்கைகளை முன்னெடுக்கும் வகையிலும், பல்கலைக்கழக சங்கத் தேர்தலில் வெற்றி பெறும் சங்க நிர்வாகிகளே பணி நிரவல் ஊழியர்களின் கோரிக்கைகளைக் கையாளும் வகையிலும், நடைபெற உள்ள ஊழியர் சங்கத் தேர்தலில், பழைய முறைப்படி வாக்களிக்க அனுமதி அளிக்க வேண்டும்." இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

 

சார்ந்த செய்திகள்