Skip to main content

"தாலியை லஞ்சமாக வாங்கிக் கொண்டு இறப்புச் சான்றிதழை தாருங்கள்" - அதிகாரிகளிடம் கதறிய பெண் 

Published on 16/05/2023 | Edited on 16/05/2023

 

cheyyar taluk office women request her father related certificate incident 

 

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டத்திற்கு உட்பட்ட இளநீர் குன்றம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாய கூலித் தொழிலாளி திலகவதி. இவரின் தந்தை பரசுராமன் சில மாதங்களுக்கு முன்பு நோய்வாய்ப்பட்டு இறந்துள்ளார். அவரது இறப்புச் சான்றிதழ் கேட்டு செய்யாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆன்லைன் வழியாக மனு தந்துள்ளார் திலகவதி. கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் போன்றோர் விசாரணை நடத்தி அதன் அறிக்கையை வட்டாட்சியருக்கு அனுப்பி உள்ளனர். வட்டாட்சியர் அலுவலகம் அதன் மீது நடவடிக்கை எடுத்து இவருக்கு இறப்புச் சான்றிதழ் வழங்கி இருக்க வேண்டும். இதெல்லாம் 30 நாட்களில் நடந்து முடிந்து இருக்க வேண்டும். ஆனால் கடந்த நான்கு மாதங்களாக இறப்புச் சான்றிதழ் வழங்காமல் வட்டாட்சியர் அலுவலக அலுவலர்கள் அலைக்கழித்துள்ளனர்.

 

இதனால் அதிருப்திக்கு ஆளான திலகவதியிடம் பணம் தந்தால்தான் வேலை சீக்கிரம் முடியும் என அங்கிருந்த இடைத் தரகர்கள் கூறியுள்ளனர். என்னிடம் பணம் இல்லை நான் கூலி வேலைக்கு செல்பவள் என சொல்லி உள்ளார். பணம் தராததால் சான்றிதழ் கிடைக்காமல் இருந்து வந்தது. கடந்த மே 11 ஆம் தேதி தனது தாலியை கழட்டி ஒரு பேப்பரில் மடித்து வைத்து அதிகாரிகளிடம் சென்று என்னிடம் பணம் இல்லை. அதற்கு பதில் என் தாலியை தருகிறேன். லஞ்சமாக நீங்கள் வாங்கிக் கொண்டு இறப்புச் சான்றிதழை தாருங்கள் எனக் கேட்டுள்ளார்.

 

அந்தப் பெண்மணியின் சார்பாக சிலரும் பேசி கேட்டபோது, அங்கிருந்த அதிகாரிகள் இதில் சிக்கல் உள்ளது. தடை உள்ளது என ஏதேதோ காரணங்கள் சொல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரணை நடத்த செய்யாறு சப் கலெக்டர் அனாமிகா தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் விசாரணையின் முடிவின்படி செய்யாறு துணை வட்டாட்சியர் வெங்கடேசனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளனர். அதோடு உடனடியாக திலகவதியின் தந்தையார் இறப்புக்கான சான்றிதழையும் வழங்கி உள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புதிய தாலுகாவை அறிவித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
Tamil Nadu Chief Minister M. K. Stalin announced the new taluk at thanjavur district

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய வட்டங்கள் சீரமைப்பு செய்து புதிய வட்டமாக திருவோணம் பகுதியைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் சீரிய வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2022 - 2023 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர், ‘தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய வட்டங்களைச் சீரமைத்து திருவோணம் வருவாய் வட்டம் உருவாக்கப்படும்’ என்னும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

ஒரத்தநாடு வட்டத்திலுள்ள திருவோணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள், அத்தியாவசியச் சேவைகளான சாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, வாரிசுச் சான்று, பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சான்றுகளையும் வருவாய்த் துறையின் பிற சேவைகளையும் பெறுவதற்காக ஏறத்தாழ 34 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரத்தநாடு வட்டத்தின் தலைமையிடத்திற்கு மிகுந்த சிரமத்துடன் வந்து செல்ல வேண்டியுள்ளது. 

இதனால் அப்பகுதியில் உள்ள கிராம மக்களுக்குப் பொருளாதாரச் செலவுகள் அதிகமாகின்றன. அத்துடன் இந்தச் சேவைகளைப் பெறுவதற்காக அவர்கள் நாள் முழுவதும் செலவிட்டு அலையவும் வேண்டியுள்ளது. ஒவ்வொரு நாளும் பொது மக்களின் துயர் துடைப்பதில் மிகுந்த அக்கறை செலுத்தி வருகின்ற தமிழ்நாடு முதலமைச்சர், திருவோணம் பகுதி மக்களின் சிரமங்கள் தம்முடைய கவனத்திற்கு வந்ததைத் தொடர்ந்து அவற்றை உடனடியாகக் களைவதற்கு முடிவு செய்தார். 

அந்த முடிவைச் செயல்படுத்தும் விதமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய இரண்டு வருவாய் வட்டங்களையும் சீரமைத்து, காவாளப்பட்டி, சில்லத்தூர், திருநெல்லூர், வெங்கரை ஆகிய 4 குறு வட்டங்களையும், 45 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கி திருவோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய திருவோணம் வருவாய் வட்டத்தினை உருவாக்கி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இதற்குரிய அரசாணை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையினால் வெளியிடப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மூன்று மணி நேர தேடுதலுக்குப் பின் உடல்கள் மீட்பு; கிரிவலம் சென்று திரும்பியபோது நிகழ்ந்த சோகம்

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
nn

செஞ்சி அருகே சாலையோர விவசாய கிணற்றில் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சிராஜ் - சத்யா தம்பதி தங்களது குடும்ப உறுப்பினர்கள் ஒன்பது பேருடன் திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்றிருந்தனர். திருவண்ணாமலையில் கிரிவலத்தை முடித்துக் கொண்டு விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்துள்ள புலிவந்தி கிராமத்தில் உள்ள அவர்களுடைய குலதெய்வ கோயிலுக்கு சென்றுள்ளனர்.

பின்னர் நள்ளிரவில் விழுப்புரம் கப்பை கிராமத்தில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்பொழுது ஒன்பது பேரும் ஆட்டோவில் சென்று கொண்டிருந்த நிலையில் அவர்கள் சென்ற ஆட்டோ நிலை தடுமாறி சாலையோர கிணற்றில் கவிழ்ந்தது. இதில் அனைவரும் நீரில் மூழ்கினர். நான்கு பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள் நீரில் தத்தளித்து பின்னர் கிணற்றில் இருந்து வெளியேறினர்.

இதில் ஆட்டோ  ஓட்டுநரின் மகன்கள் பிரகதீஸ்வரன், ஹரி பிரசாந்த் ஆகிய இருவரும் நீரில் மூழ்கினர். உடனடியாக மீட்புப் படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் கிணற்றிற்குள் இறங்கி நடத்திய சுமார் 3 மணி நேர தேர்தலுக்குப் பிறகு இரண்டு சிறுவர்களின் உடல்களையும் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட உடல்கள் செஞ்சி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. செஞ்சி போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவில் ஆட்டோ விவசாய கிணற்றில் கவிழ்ந்து இரண்டு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.