Chess player Gukesh met and congratulated the Chief Minister

சர்வதேச செஸ் சம்மேளனத்தின் (எஃப்.ஐ.டி.இ) சார்பாக ஒவ்வொரு மாதமும் அதிகாரப்பூர்வ ரேட்டிங் பட்டியல் வெளியிடப்படும். இந்த ரேட்டிங் பட்டியலில் கடந்த 37 ஆண்டுகளாக இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக விஸ்வநாதன் ஆனந்த் இருந்து வந்தார். இந்நிலையில், இந்த மாதம் வெளியான எஃப்.ஐ.டி.இ. ரேட்டிங் பட்டியலில், விஸ்வநாதன் ஆனந்த்தை பின்னுக்குத் தள்ளி இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக குகேஷ் இடம் பிடித்திருந்தார்.

Advertisment

அண்மையில் நடந்த செஸ் உலகக் கோப்பை கால் இறுதிப் போட்டியில் குகேஷ் தோல்வி அடைந்தபோதும், குகேஷ் சர்வதேச ரேட்டிங்கில் ஏற்றம் கண்டு உலக அளவில் 8 வது இடத்தைப் பிடித்துள்ளார். சர்வதேச அளவில் இவர் தற்போது 2,758 புள்ளிகளுடன் 8வது இடத்திலும், 2,754 புள்ளிகளுடன் விஸ்வநாதன் ஆனந்த் 9 வது இடத்திலும் உள்ளனர்.

Advertisment

இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில், இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரர் டி. குகேஷ் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று (12.09.2023) சந்தித்து வாழ்த்துப் பெற்றர். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் குகேஷ்கு நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தார். மேலும் செஸ் வீரர் குகேஷ்க்கு தமிழ்நாடு அரசு சார்பில் 30 லட்ச ரூபாய் ஊக்கத்தொகையாக நிதியுதவி வழங்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி, வேலம்மாள் கல்வி அறக்கட்டளையின் தாளாளர் எம்.வி.எம். வேல்மோகன் மற்றும் குகேஷின் பெற்றோர் ஆகியோர் உடன் இருந்தனர்.