Skip to main content

வீட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து; இருவர் உயிரிழப்பு!

Published on 11/05/2025 | Edited on 11/05/2025

 

Chennai Valasaravakkam house incident Two people lost thier life

சென்னை வளசரவாக்கம் சவுத்ரி நகர் 4வது பகுதியில் சொகுசு பங்களா அமைந்துள்ளது. இந்த பங்களாவின் பூஜை அறையில் இன்று (11.05.2025) மதியம் 1 மணியளவில் யாரும் எதிர்பாராத விதமாக தீடிரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயானது வீட்டில் உள்ள பெரும்பாலான பகுதியில் பரவியது. இது குறித்து உடனடியாக அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினருக்கும், வளசரவாக்கம் காவல் துறையினருக்கும் தகவல் அளித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு  வீரர்கள் தீயை அணைக்கு பணியில் ஈடுபட்டனர். இருப்பினும்  தீ மளமளவெனக் கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் மேலும் 3 வாகனங்கள் அங்கு வரவழைக்கப்பட்டது.

அதன்படி மொத்தமாக 4 தீயணைப்பு வாகனங்களில் வந்த 40க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரமாகத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்படுகிறது. முதற்கட்டமாக வீட்டின் உள்ளே 3 நபர்கள் சிக்கி இருப்பதாகத் தகவல் வெளியாகியிருந்தது. அதனைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கிருந்த ஒருவரைப் பத்திரமாக மீட்டு அழைத்து வந்தனர். அதன் பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரது பெயர் ஸ்ரீராம் என்பது தெரியவந்தது.

மேலும் வீட்டில் ஸ்ரீராமின் பெற்றோர் நடராஜன் (வயது 70), அவரது தாயார் தங்கம் ஆகிய 3 நபர்கள் வசித்து வந்தது தெரியவந்தது. அச்சமயத்தில் வீட்டின் உள்ளே இருந்த நடராஜன் மற்றும் அவரது மனைவி தங்கம் ஆகிய இருவரும் இந்த தீ விபத்தில் உயிரிழந்ததாக வளசரவாக்கம் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி கணவன், மனைவி என இருவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்த தகவல் போலிசாரின் விசாரணைக்குப் பின்னரே தெரிய வரும் எனக் கூறப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்