சென்னை வடபழனி அரசு போக்குவரத்து பணிமனையில் நள்ளிரவில் ஊழியர்கள் பணிகளை முடித்து கொண்டு அமர்ந்து இருந்தனர். அப்போது பணிமனைக்கு வந்த அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சுவரின் மீது மோதியது. இதில் சுவர் இடிந்து விழுந்ததில் பணிமனை ஊழியர்கள் 7 பேர் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், சேகர், பாரதி என்ற 2 ஊழியர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 5 பேர் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் உயிரிழந்த பாரதி என்பவருக்கு கடந்த 24 நாட்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. அந்த குடும்பத்தை மீளாத்துயரில் ஆழ்த்தி இருக்கிறது பாரதியின் உயிரிழப்பு. திருமணமாகி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் கணவரை பறிகொடுத்து விட்டார் அந்த இளம்பெண்.
திருமணமாகி 24 நாட்கள்தான் ஆன நிலையில் கணவர் பாரதியை வேலைக்கு சென்று வா என அனுப்பிய அவர் தற்போது அவரை இழந்திருக்கிறார். கடந்த நான்காம் தேதி தான் நாகேஷ்வரிக்கும்மாநகரப் போக்குவரத்துக் கழக ஊழியர் பாரதிக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களின் வாழ்க்கை தொடங்குவதற்கு முன்பே பணிமனையில் ஏற்பட்ட இந்த திடீர் விபத்தில் முடிந்து விட்டது. திருமணத்திற்குப் பிறகு விடுமுறை கூட கிடைக்காமல் மூன்றே நாளில் பணிக்குத் திரும்பிய கணவரை இப்படி பார்க்கும் நிலை வந்தது என கதறி அழுகிறார் அந்த புது மணப்பெண்.

இதுகுறித்து பேசிய அவர்,திருமணமான ரெண்டு மூன்று நாள்லேயே வந்து வேலையில்சயின் போட்டுட்டு போக சொல்லி கூப்பிட்டுக் கொண்டே இருந்தார்கள். லீவு தர மாட்டார்கள் தினமும் கால் பண்ணி கொண்டே இருக்கிறார்கள். ஒரு நாளைக்கு பத்து முறையாவது கால் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். கல்யாணம் ஆகி நான்கு, ஐந்து நாட்கள்தான் வீட்டில் இருந்தார்கள். கேட்டாகூட லீவு தர மாட்டார்கள். நேற்று அப்படி தான் சொல்லி விட்டு கிளம்பினார். காலையில் 4 மணிக்கு தான் தெரியுமே அவர் இறந்து விட்டார் என்று என கண்ணீர் மல்க தனது துயரத்தை வெளிப்படுத்தினார் அந்த மணப்பெண்.

அதேபோல் அந்த ஊழியரின் சகோதரி பேசும்பொழுது, கவர்மெண்ட் வேலை கவர்மெண்ட் வேலை எனஎவ்வளவு பெருமையா சொல்லி கொண்டு இருந்தோம்.நம்ம அண்ணனும்கவர்மெண்ட் வேலை என்னுடைய வீட்டுக்காரரும் கவர்மெண்ட் வேலை என்று பெருமையாக சொல்லிக் கொண்டிருந்தேன். மூன்று வருடமாக பெண் தேடி இப்பொழுதுதான் பெண் தானாக கிடைத்து தான் கல்யாணம் ஆச்சு. இப்போ எங்க அண்ணன் போனது பெருசு இல்ல இந்த பொண்ணுக்கு நாங்கள் என்ன பதில் சொல்வது. இந்த பெண்ணை யார் கல்யாணம் பண்ணிக்குவா.அப்படியே செய்து கொண்டாலும் அந்த பெண்நிம்மதியாக இருப்பாரா? பத்து நாள் கூட நீ கொடுக்கலைன்னா அப்படி என்ன வேலை என்று கதறினார் கண்ணீருடன்.
Follow Us