ADVERTISEMENT

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு கலைஞர் பெயரைச் சூட்டுவது குறித்து அரசுதான் முடிவெடுக்க முடியும்!- கோரிக்கை மனு தள்ளுபடி!

12:51 AM Sep 15, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

டி.எம்.எஸ் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு மறைந்த முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பெயரைச்சூட்டுவது குறித்து அரசுதான் முடிவெடுக்க முடியும் எனக் கூறி, அந்த கோரிக்கையுடன் தொடரப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கலைஞர் தமிழ்ப் பேரவை மாநிலச் செயலாளர் பி.ராதாகிருஷ்ணன், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ஆலந்தூர் மெட்ரோ ஸ்டேஷனுக்கு அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ என்றும், சென்ட்ரல் மெட்ரோ ஸ்டேஷனுக்கு எம்.ஜி.ராமச்சந்திரன் சென்னை சென்ட்ரல் மெட்ரோ என்றும், சி.எம்.பி.டி மெட்ரோ ஸ்டேஷனுக்கு ஜெ.ஜெயலலிதா சி.எம்.பி.டி மெட்ரோ ஸ்டேஷன் என்றும் பெயர்களை முதல்வர் பழனிசாமி சூட்டியுள்ளார்.


ஆனால், சென்னையில் மெட்ரோ ரயில் சேவைக்கான திட்டத்தை, முதன்முதலாக வடிவமைத்து மத்திய அரசிடம் அனுமதி பெற்றவர் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி. தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், இதற்காக ஜப்பான் நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டு, அங்கு உள்ளது போன்ற மெட்ரோ திட்டத்தை சென்னையிலும் கட்டமைக்க, தி.மு.க ஆட்சி காலத்தில் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மெட்ரோ திட்டத்துக்கு முக்கிய காரணமான கலைஞரின் முயற்சியைத் திட்டமிட்டு மறைக்கவும், அரசியல் காரணங்களுக்காகவும், மெட்ரோ ஸ்டேஷன்களுக்கு 3 முன்னாள் முதல்வர்களின் பெயர்களை, தமிழக அரசு சூட்டியுள்ளது. அந்த வரிசையில் தேனாம்பேட்டை டி.எம்.எஸ் மெட்ரோ ஸ்டேஷனுக்கு ‘டாக்டர் கலைஞர் கருணாநிதி டி.எம்.எஸ் மெட்ரோ ஸ்டேஷன்’ எனப் பெயர் சூட்ட உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஆர்.ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பெயரை, டி.எம்.எஸ் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு சூட்டுவது குறித்து, சென்னை உயர்நீதிமன்றம் முடிவெடுக்க முடியாது என்றும்,அரசுதான் முடிவெடுக்க வேண்டுமெனவும் கூறி மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT