
சென்னை திருவொற்றியூர் அடுத்துள்ள விம்கோநகர் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் விவேகானந்தன். திமுக பிரமுகரான இவருக்கு காமராஜ் என்ற மகன் உள்ளார். இவர்கள் இருவரும் திருவொற்றியூர் மற்றும் சில பகுதிகளில் மாநகராட்சி பணிகளை ஒப்பந்தத்தின் அடிப்படையில் எடுத்து செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் காமராஜ் அவரது அலுவலகத்திற்கு வந்துள்ளார். அப்போது, அவரது அலுவலகத்திற்கு இரு சக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அலுவலகத்தின் உள்ளேயே புகுந்து காமராஜை சரமாரியாக வெட்டியுள்ளனர். காமராஜின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு வரும் முன் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.
அதன் பின்னர் ரத்த வெள்ளத்தில் கிடந்த காமராஜை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி காமராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, எண்ணூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கொலைக்கு காரணமான மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.