​​Chennai Tiruvallikeni Krishnammal Pettai area Dhanush incident

சென்னை திருவல்லிக்கேணி கிருஷ்ணம்மாள் பேட்டை பகுதியில் வசித்து வந்தவர் தனுஷ் (வயது 24). இவர் பல்வேறு குத்துச் சண்டை போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கம் பெற்றுள்ளார். மேலும் இவர் காவல்துறை தேர்வுக்கும் தொடர்ந்து தயார் படுத்திக் கொண்டு வந்தார். முன்னதாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கும், அவர் பகுதியில் வசித்து வந்த இளைஞர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக தனுஷ் மீது இரண்டு வழக்குகள் தொடரப்பட்டிருந்தது. இதனால் இவர் காவல்துறை தேர்வுக்குத் தயாராக முடியாத நிலை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இந்நிலையில் தான் இவர் நேற்று நள்ளிரவு வீட்டின் அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று தனுஷை ஓட ஓட வெட்டி படுகொலை செய்தது. இந்த சம்பவத்தைத் தடுக்க சென்ற அருண் என்பவரையும் இந்த கும்பல் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது. இந்த சம்பவத்தில் உடல் மற்றும் தலை முழுவதும் சிதைக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலே தனுஷ் உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த ஐஸ் ஹவுஸ் போலீசார் தனுஷின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisment

அதே சமயம் இந்த சம்பவத்தில் வெட்டுக்காயம் ஏற்பட்ட அருணை மீட்டு ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களைத் தீவிரமாகத் தேடி வந்தனர். சென்னையில் குத்துச்சண்டை வீரர் ஓட ஓட வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த கொலை சம்பவம் தொடர்பாக மோகன், செந்தில், டேவிட், விஷால் உள்ளிட்ட 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.