chennai thoraipakkam young man and his team related incident 

முன்விரோதம் காரணமாக வாலிபர் ஒருவர் கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டசம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisment

சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்தவர் நித்யா (வயது 34). அதே பகுதியைச் சேர்ந்தவர் வீரமருது (வயது 34).இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இது மட்டுமின்றி போதைப்பொருள் விற்பனையில் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இவர்கள் இருவர்மீதும் காவல் துறையில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

Advertisment

இந்நிலையில், வீரமருது தனது நண்பர்களான குணா, தினேஷ், வசந்த், அபி மற்றும் மணி ஆகியோருடன் சேர்ந்து நித்யாவை கொலை செய்யத்திட்டமிட்டு, அதன்படிநேற்று அதிகாலை நித்யாவை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு மது அருந்த காரப்பாக்கம் அருகில் உள்ள காலி மைதானத்திற்கு அழைத்துள்ளார். இதனை நம்பி நித்யா அங்கு சென்று வீரமருது மற்றும் அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். அதன் பிறகு வீரமருது மற்றும் அவரது நண்பர்கள் மறைத்து வைத்திருந்த கிரிக்கெட் மட்டையால் நித்யாவை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

நித்யா பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டு இருப்பதை அடுத்து அவர்கள் 6 பேரும் ஆம்புலன்சை தொடர்பு கொண்டு ஒருவர் ரத்தக் காயங்களுடன் உள்ளதாகக் கூறியுள்ளனர். அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் மூலம் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த நித்யாவை வீரமருது மற்றும் அவரது நண்பர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக நித்யா உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் வீரமருது மற்றும் அவரது கூட்டாளிகளான தினேஷ், குணா, வசந்த் மற்றும் மணி ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். தலைமறைவாக உள்ள அபி என்பவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.