Skip to main content

"இப்ப வந்தா ஃப்ரீயா இருக்கும், அப்புறம்...?” - தீவுத்திடலில் களைகட்டும் பட்டாசு விற்பனை

Published on 19/10/2019 | Edited on 21/10/2019

 

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை தீவுத்திடலில் பட்டாசுகள் விற்பனை நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு மொத்தம் 65 கடைகள் உள்ளன. பட்டாசுகளை வாங்க கார்களில் வருபவர்களுக்கு கார் பார்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. பட்டாசுகள் உள்ளதால் உள்ளே செல்வதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவை அங்கு வருபவர்களுக்கு தெரியும் வகையில் பேனர் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. 

பட்டாசு கடை ஒன்றில் வேலை பார்க்கும் தினேஷ் என்பவர் நம்மிடம், ''கடந்த வருடத்தை விட இந்த வருடம் குறைவாகத்தான் சரக்குகள் இறங்கியுள்ளது. சிவகாசியில் ஆறு மாதம் விடுமுறை விட்டார்கள். மூன்று மாதம்தான் வேலை நடந்தது. அதில் இரண்டு மாதம் மழை பெய்திருக்கிறது. ஒரு மாதத்தில் வெடிகளை காயவைத்து தயார் செய்திருக்கிறார்கள். நேற்று முதல் கடைகள் தீவுத்திடலில் பட்டாசு விற்பனை கடைகள் திறக்கப்பட்டது. இன்னும் மக்களுக்கு சரியாக தெரியவில்லை. ஞாயிற்றுக்கிழமை மக்கள் பட்டாசுகளை வாங்க வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

 

chennai theevu thidal deepavali pattasu 01



 

 


காலை 8, 9 மணியில் இருந்து இரவு 12 மணி வரை கடைகள் திறந்திருக்கும். மொத்தம் 60ல் இருந்து 70 கடைகள் உள்ளன. கிப்ட் பாக்ஸ், ஸ்டாண்டர்டு என இருக்கிறது. 16 வகை பட்டாசுகள் உள்ள கிப்ட் பாக்ஸ் 270 ரூபாய், 60 வகை பட்டாசுகள் உள்ள கிப்ட் பாக்ஸ் 900 ரூபாய் வரும். அனைத்து தரப்பு மக்களும் வாங்கும்படிதான் பட்டாசுகள் வந்துள்ளன. இந்த வருடம் பட்டாசு புகையினால் சுற்றுப்புறம் மாசுபடாத வகையில் பசுமை பட்டாசுகள் அறிமுகம் செய்யப்படுகின்றன. தீவுத்திடலில் விற்பனை செய்யப்படும் பட்டாசுகள் குறிப்பிட்ட அளவு தள்ளுபடி விலையில் விற்கப்படும். கையில் இருக்கும் காசுக்கு ஏற்றதுபோல் இங்கு பட்டாசுகள் உள்ளன. இந்த தீபாவளி அனைவருக்கும் நல்ல தீபாவாளியாக அமைய வேண்டும் என்று வாழ்த்துக்கள்'' என்றார்.

 

Diwalli


மாதாவரத்தில் இருந்து பட்டாசுகள் வாங்க வந்த சீனிவாசன், ''கடந்த வருடம் சிவகாசியில் நேரடியாக பர்சேஸ் செய்தோம். பின்னர் பத்தவில்லை என்று தீவுத்திடலில் பட்டாசுகள் வாங்கினோம். இந்த வருடம் தீவுத்திடலில் வாங்க முன்னதாகவே வந்துவிட்டேன்.ஆனால் போன வருடத்தை விட இந்த வருடம் விலை கொஞ்சம் அதிகமாகத்தான் உள்ளது. டிஸ்கவுண்ட் பண்ணித்தான் கொடுக்கிறார்கள்.  முன்னதாகவே வந்ததால் கூட்ட நெரிசல் இல்லாமல் பொறுமையாக பட்டாசுகளை பார்த்து எடுக்க முடிகிறது. போன வருஷத்தைவிட இந்த வருடம் 60 ஷாட், 70 ஷாட் வந்திருக்கிறது என்று சொல்லுகிறார்கள். பசுமை பட்டாசுகள் வந்திருப்பதாக சொன்னார்கள். இவைகள் பற்றிய விழிப்புணர்வு இன்னும் பொதுமக்களிடம் அதிகம் வர வேண்டும்'' என்றார்.  

அம்பத்தூரில் இருந்து வந்திருந்த பிரசாத், பட்டாசு கடைகள் போட்டு இரண்டு நாட்கள்தான் ஆகிறது. அதனால்தான் கூட்ட நெரிசலுக்கு முன்பு வந்து வாங்கிவிட்டோம். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விலை அதிகமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் டிஸ்கவுண்ட் கொடுக்கிறார்கள். பசங்களுக்காக பேன்ஸி பட்டாசுகள் அதிகம் வந்திருக்கிறது. குழந்தைகள் இதனை விரும்பி வெடிப்பார்கள். நான் ரூபாய் எட்டாயிரத்துக்கு பர்சேஸ் பண்ணினேன் என்றார். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Traffic change in Chennai for a year

சென்னை தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் நாளை (27.04.2024) முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி (26.04.2025) வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “மேட்லி சந்திப்பு தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் 27.04.2024 முதல் 26.04.2025 வரை ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றுப்பாதைகளில் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் பனகல் பார்க் அருகில் உள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில் செல்லத் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வாகனங்கள் மேம்பாலத்தின் அனுகு (சர்வீஸ் ரோடு) சாலை வழியாக சென்று பிரகாசம் சாலை, பாஷ்யம் சாலை, தியாகராயர் சாலை, பர்கிட் சாலை வழியாக தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். 

Traffic change in Chennai for a year

பர்கிட் சாலை, மூப்பாரப்பன் தெரு சந்திப்பில் இருந்து மேட்லி நோக்கி செல்வதற்கு பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்கள் மூப்பாரப்பன் தெரு, மூசா தெரு, தெற்கு தண்டபானி தெரு, மன்னார் தெரு வழியாக உஸ்மான் சாலை மூலம் தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து சைதாப்பேட்டை அண்ணா சாலையை அடைய தெற்கு உஸ்மான் சாலை சென்று கண்ணம்மாபேட்டை சந்திப்பை அடைந்து தென்மேற்கு போக் சாலையில் சென்று சிஐடி நகர் நான்காவது பிரதான சாலை, சிஐடி நகர் மூன்றாவது பிரதான சாலை சென்று அண்ணா சாலையை அடையலாம். 

Traffic change in Chennai for a year

சிஐடி நகர் 1ஆவது பிரதான சாலையிலிருந்து வடக்கு உஸ்மான் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் கண்ணம்மாபேட்டை சந்திப்பில் தென்மேற்கு போக் சாலை வழியாகச் சென்று வெங்கட் நாராயணா சாலையில் சென்று நாகேஸ்வரன் ராவ் சாலை வழியாக வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு உஸ்மான் சாலையை அடைய மேட்லி ரவுண்டானாவில் இருந்து பர்கிட் ரோடு சென்று வெங்கட் நாராயண சாலை வழியாக நாகேஸ்வர ராவ் சாலையில் இடதுபுறம் திரும்பி வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். எனவே வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

சென்னை விமான நிலையத்தில் கிடந்த தங்கம்; சுங்கத்துறையினர் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Gold found at Chennai airport; Customs investigation

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் கிடந்த தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சர்வதேச விமான நிலைய குப்பைத் தொட்டியில் கேட்பாராற்று கிடந்த ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குப்பைத் தொட்டியில் கிடந்த 1.2 கிலோ தங்க நகைகளைக் கைப்பற்றிய சுங்கத் துறையினர், சிசிடிவியை பார்க்காதபடி நகையை குப்பைத் தொட்டியில் போட்டுச் செல்லும் நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குப்பைத் தொட்டியில் கிடந்த மர்ம பார்சலில், வெடிகுண்டு இருக்குமோ என்ற சந்தேகத்தில் சோதனை நடத்திய போது, தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னை விமான நிலையத்தில் ரூ.85 லட்சம் மதிப்பிலான 1.25 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.