
சென்னை தேனாம்பேட்டை டாக்டர் நரசிம்மன் சாலை பகுதியில் நேற்று (25.05.2025) இரவு 12 மணி அளவில் 2 இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே தேனாம்பேட்டை சேர்ந்த அழகேசன் என்ற பைக் மெக்கானிக் உயிரிழந்தார். மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த மயிலாப்பூரைச் சேர்ந்த சரவணன் என்பவர் படுகாயம் அடைந்தார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து சம்பவம் குறித்து தற்போது பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதே சமயம் இந்த விபத்தை ஏற்படுத்திய சரவணனைக் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவெடுத்துள்ளனர். முன்னதாக இந்த விபத்து நடந்த இடத்தில் மிகப்பெரிய பள்ளம் இன்று இருந்துள்ளது. அதாவது கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மழைநீர் வடிகாலுக்காகச் சாலையில் பள்ளம் தோண்டப்பட்டது. அதன் பின்னர் இந்த பள்ளம் சரிவர மூடப்படாதது இந்த விபத்திற்குக் காரணம் என அப்பகுதி பொதுமக்களும், போலீசாரும் தகவல் தெரிவித்துள்ளனர்.
இத்தகைய சூழலில் தான் இரு சக்கர வாகனத்தில் வந்த அழகேசன் அப்பகுதியில் உள்ள பள்ளத்தைக் கண்டு விலகிச் செல்ல முற்பட்டுள்ளார். அப்போது எதிர்த்திசையில் ஒரு வழிப்பாதையில் தவறான திசையில் வந்த சரவணன் அதிவேகமாக வந்துள்ளார். இதனால் 2 இருசக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதியது. அச்சமயத்தில் அழகேசன் தலைக்கவசம் அணியாமல் இருந்துள்ளார். இதனால் அழகேசனுக்குத் தலையின் பின்பக்கம் அடிபட்டு உயிரிழந்துள்ளார். எனவே வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சாலையில் உள்ள பள்ளத்தை உடனடியாக மூட வேண்டும் என்று அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த விபத்து தொடர்பான தொடர்பான சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.