Skip to main content

8 வழிச்சாலை தீர்ப்பு மகிழ்ச்சியே... பாதிக்கப்படவிருந்த விவசாயிகள் பேட்டி

ia-Desktop ia-mobile

சேலம் - சென்னைக்கு சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் வழியாக 277 கி.மீ தூரத்துக்கு 8 வழிச்சாலை 10 ஆயிரம் கோடியில் அமைக்க மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவும், தமிழகத்தை ஆளும் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி அரசும் இணைந்து முடிவு செய்தது. இதனால் வேலை வாய்ப்புகள் பெருகும், விரைவில் சென்னைக்கு சேரலாம் என காரணம் சொன்னார்கள் பாஜகவும், அதிமுகவும்.

 

chennai salem 8 way road


இந்த சாலையால் 3 ஆயிரம் ஹெக்டர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகிறது, 5 இடங்களில் பாதுகாக்கப்பட்ட வனங்கள் அழிக்கப்படுகிறது என விவசாய அமைப்புகளும், சுற்றுசூழல் ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு, சேலத்துக்கு செல்ல ஏற்கனவே இரண்டு தேசிய நெடுஞ்சாலைகள் உள்ள நிலையில் இந்த 8 வழிச்சாலை எதற்காக என்கிற விமர்சனமும் எழுந்தது.


இந்த சாலை பயணமாகவுள்ள சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டத்தின் விவசாயம் பெரும்பாலானவை அழிந்துவிடும் என இந்த திட்டத்தை எதிர்த்து தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக, பாமக, மதிமுக, விசிக, இடதுசாரிகள், விவசாய சங்கங்கள், சமூக ஆர்வலர்கள் பெரும் போராட்டம் நடத்தினர்.


அதோடு, சட்டப்போராட்டத்திலும் குதித்தனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக, பாமக, பூவுலகின் நண்பர்கள், விவசாய அமைப்புகள் சில என தனித்தனியாக வழக்கு தொடுத்தன. வழக்கின் இறுதி விசாரணை கடந்த ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி நடைபெற்றது. அனைத்து தரப்பிலும் இறுதி வாதங்கள் அன்று முடிவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் இன்று காலை  தீர்ப்பளித்தனர். 
 

நிலங்களை கையகப்படுத்த ஏற்கனவே இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தாலும், அதிமுக அரசாங்கம் அதனை மதிக்காமல் நிலங்களை பறிமுதல் செய்தது. இதற்கு பாஜக அரசும் துணை நின்றது.


இந்நிலையில் ஏப்ரல் 8-ம் தேதியான இன்று சென்னை உயர்நீதிமன்றம் அந்த திட்டத்துக்கு நிரந்தர தடை விதித்துள்ளது. இது 5 மாவட்ட விவசாயிகளை பெரும் மகிழ்ச்சிக்கொள்ள வைத்துள்ளது. இந்த திட்டத்தை எதிர்த்து போராடிய திமுக, இடதுசாரிகள், மதிமுக, விவசாய சங்கங்கள், 8 வழிச்சாலை எதிர்ப்பு கூட்டியக்கம் போன்றவை இணைந்து திருவண்ணாமலையில் பட்டாசு வெடித்து கொண்டாடியது.


இந்த தீர்ப்பு பற்றி நிலத்தை பறிக்கொடுக்க இருந்த விவசாயிகள் என்ன நினைக்கிறார்கள் என அறிய சில விவசாயிகளிடம் பேசினோம்.


பெலாசூர் ஏழுமலை, “என்னோட 3.5 ஏக்கர் விவசாய நிலத்தின் குறுக்கே செல்லும் வகையில் 8 வழிச்சாலைக்காக கல் நட்டார்கள். இதனால் என்னுடைய மொத்த நிலமும் பறிபோனது. என் குடும்பத்துக்கு விவசாயத்தை தவிர வேறு எதுவும் தெரியாது. என் நிலத்தை அரசாங்கம் எடுக்காமல் இருக்க யாரெல்லாம் போராட்டம் நடத்தினார்களோ அங்கு எல்லாம் சென்று கலந்துகொண்டேன். இப்போது தீர்ப்பு வந்துள்ளது. பெரிய சந்தோஷமாக இருக்கிறது. இந்த சந்தோஷம் நீடிக்க வேண்டும், ஆட்சியில் உள்ள அரசாங்கம் தேர்தலுக்கு பின் இதில் விளையாடக்கூடாது” என்றார்.

 

chennai salem 8 way road


பெரியகிளம்பாடி பச்சையப்பன்,  “நாங்க அண்ணன் தம்பிங்க 4 பேரு. எங்களோட 6 ஏக்கர் நிலத்தில் 4.5 ஏக்கர் அரசாங்கம் எடுத்துக்கிறதா கல்லு நட்டது. வாழ்வாதாராம்மே சுத்தமா போயிடுச்சி. இந்த வயசுலப்போய் நாங்க என்ன வேலை செய்யறதுன்னு தெரியாம முழிச்சோம். போராடனோம், எங்க போராட்டத்துக்கு கிடைத்த வெற்றிதான் இந்த தீர்ப்புன்னு நினைக்கிறேன். எங்களுக்காக போராடிய அனைவருக்கும் நன்றி” என்றார்.

பாதிக்கப்படும் நிலையில் இருந்த விவசாயிகள் நீதிமன்ற உத்தரவால் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார்கள் என்பது அவர்களிடம் பேசும்போது தெரிந்தது.

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...