
முன்பகை காரணமாக ரவுடி சிவாவை மற்றொரு ரவுடியான அழகுராஜா வெட்டிப் படுகொலை செய்துள்ளார். சென்னையில் பிரபல ரவுடியான சிவா என்கிற சிவகுமார், 20 வருடத்திற்கு முன்பாக தோட்ட சேகர் என்பவரைஅவருடைய மகனான அழகுராஜாவின் கண்முன்னே வெட்டிப் படுகொலை செய்தார். அதனைத் தொடர்ந்து, தன் தந்தையைத் தன்னுடைய கண்முன்னே வெட்டிக் கொலை செய்த கோர சம்பவத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாத நிலையில், சிவாவை கொலை செய்ய பலமுறை அழகுராஜா அவர் சக நண்பர்களுடன் திட்டம் தீட்டிவந்தார்.
கடந்த ஆண்டு சிவா எழும்பூர் நீதிமன்றத்திற்குச் சென்று ஆட்டோவில் திரும்பி வந்துகொண்டிருந்தபோது, ஆட்டோவின் மீது வெடிகுண்டு வீச முயற்சி செய்யப்பட்டது. ஆனால், அப்போது அந்த வெடிகுண்டு ஆட்டோ மீது விழாமல் தவறியதால் சிவா தப்பித்துவிட்டார். இதனைத் தொடர்ந்து பலமுறை போட்ட ஸ்கெட்ச்சில் சிக்காத சிவா, நேற்று (04.03.2021) வழக்கம்போல எழும்பூர் நீதிமன்றத்திற்குச் சென்றுவிட்டு தனது கூட்டாளிகள் இருக்கும் இடமான போஸ்டல் காலனி, 2வது தெருவிற்குச் சென்று திரும்பியுள்ளார். அப்போது ஏற்கனவே அழகுராஜா திட்டம் தீட்டியப்பபடி அவரது கூட்டாளிகள் 10 பேருடன் கத்தியுடன் காத்திருந்தார்.
சிவா வந்தவுடன் கத்தியை எடுத்து அவரை தாக்கியுள்ளனர். அதனைத் தொடர்ந்து சிவாவுடன் வந்த அவரது கூட்டாளிகளான அறிவழகன், பூபாலன் ஆகியோர் அழகுராஜா தரப்பினரைத் தாக்கியுள்ளனர். இதில் பூபாலன், சிவாவை காப்பாற்றஅவரை கட்டிப்பிடித்துக்கொள்ளவே, பூபாலன் அதிகமாக தாக்கப்பட்டுள்ளார். இதில் சிவா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரது கூட்டாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அழகுராஜா மற்றும் அவரது கூட்டாளிகளைப் போலீசார் தேடி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)