Skip to main content

'பருவ மழையை எதிர்கொள்ளச் சென்னை தயார்' - தலைமைச் செயலாளர் பேட்டி

Published on 25/05/2024 | Edited on 25/05/2024
'Chennai is ready to face the monsoon'-Chief Secretary interview

தென்கிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளச் சென்னை தயாராக உள்ளதாகத் தமிழக தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா தெரிவித்துள்ளார்.

இன்று சென்னையில் வடிகால் சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்த தமிழக தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது அவர் பேசுகையில், ''வடகிழக்கு பருவ மழையின் போது மூன்று நான்கு மாதமாக வடிகால் பணியை நாம் நிறுத்தி விட்டோம். அந்த நேரத்தில் வேலைகளை செய்ய முடியாது என்பதால் நிறுத்திவிட்டோம். ஜனவரிக்குப் பிறகு ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்ட வேலைகளைத் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளோம். இந்தக் கோடைகாலத்தில் இதைப் போன்று பணிகளை நன்றாகச் செய்ய முடியும்.

சென்னை மற்றும் கடலோர பகுதிகளில் அனைத்து துறைகள் சார்ந்த பணிகளையும் செய்து வருகிறோம். நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பணிகளைச் சீக்கிரமாக முடிக்க வேண்டும். செப்டம்பருக்குள் இந்தப் பணிகளை முடிக்க வேண்டும். இந்தப் பணிகளை முடித்தால்தான் வருகின்ற மழைக்காலத்தில் அதனுடைய பயன் கிடைக்கும். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் சென்னை மாநகராட்சி ஆணையர் தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனை நடத்துகிறார்கள். மாதத்தில் ஒருமுறை மாநில அளவில் நாங்கள் ஆலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்கிறோம். ஒவ்வொரு மண்டலம், ஒவ்வொரு வார்டுக்கும் குழுக்கள் அமைக்கப்பட்டு எங்கெங்கு என்னென்ன பிரச்சனைகள் இருக்கிறது என்பதைப் பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. எந்த இடங்களில் இப்பொழுது வேலை செய்யலாம், எந்த இடங்களில் வேலையைத் தள்ளி வைக்கலாம் என்று அனைவரும் ஒன்றாக அமர்ந்து ஆலோசித்துதான் முடிவு எடுக்கிறார்கள். தென்கிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளச் சென்னை தயாராக உள்ளது'' என்றார்.

சார்ந்த செய்திகள்