
வடகிழக்கு பருவமழைத் தொடங்கியதையொட்டி, தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னையில் நேற்று (06/11/2021) இரவு முதல் பெய்து கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அதேபோல், தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மழைநீர் மற்றும் சாலையில் முறிந்து விழுந்த மரங்களை அகற்றும் பணியானது போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வடசென்னையில் மழையால் ஏற்பட்டுள்ள சேதங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.
நிவாரணப் பணிகள் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (07/11/2021) வெளியிட்ட அறிக்கையில், "அரசு அதிகாரிகளுடன் இணைந்து மக்களுக்கு தேவையான நிவாரண பணிகளை தி.மு.க.வைச் சேர்ந்த சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உடனே நிறைவேற்ற வேண்டும்.
கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு மற்றும் மருந்துகள் அளித்தல், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.