Chennai Pulianthoppu Mannar Road Area incident

Advertisment

சென்னை புளியந்தோப்பு மன்னார் சாலை பகுதியைச்சேர்ந்த அமீர் என்பவரது மகன் ஜாகிர் (வயது 17). இந்தச் சிறுவன் 10 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். இவர் எலெக்ட்ரீசியன் வேலைக்குச் சென்று வந்துள்ளார். இத்தகைய சூழலில்தான் கடந்த 26 ஆம் தேதி வேலைக்குச் செல்வதாக வீட்டில் கூறிவிட்டு தனது நண்பரின் வீட்டுக்கு சிறுவன் சென்றுள்ளார். அங்கு தனது நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து இந்தச் சிறுவன் போதை ஊசி செலுத்திக் கொண்டதாக கூறபடுகிறது.

இதனையடுத்து சிறுவனுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவனின் நண்பர்கள் அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். போதை ஊசியால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் போலீசார் நடத்திய இந்த விசாரனையில் உயிரிழந்த சிறுவனுக்கு போதை ஊசியை வாங்கி கொடுத்ததுபுளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பதும், அவருக்கு போதை ஊசியை விற்பனை செய்தது கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த செல்வி என்பதும் தெரியவந்தது. இந்நிலையில் சென்னை புளியந்தோப்பில் போதை ஊசி செலுத்திக்கொண்டதால் சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் இவர்கள் இருவரும் கைது செய்யப்படுள்ளனர்.