
கரோனா தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவில் மிகத் தீவிரமாக பரவிவருகிறது. தமிழகத்திலும் அதிகளவில் கரோனாவின் பாதிப்பு இருந்துவருகிறது. இதனால், முழுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளையில் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் ஆசிரியர்கள் வகுப்புகள் எடுக்கப்படுகிறது.
இந்நிலையில், சென்னையில் அமைந்துள்ள பிரபல தனியார் பள்ளி ஒன்றில் பயிலும் மாணவிகள், தங்களின் ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக புகார்கள் அளித்துள்ளனர். திமுக எம்.பி. கனிமொழி, கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் ஆசிரியரின் இச்செயலைக் கண்டித்தும் உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரியும் தெரிவித்தனர்.
இந்நிலையில், இன்று (24.05.2021) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம், “சென்னையில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மீது முன்னாள், இந்நாள் மாணவிகள் பலர் பாலியல் புகார்..” என கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதில் அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "அதுகுறித்த தகவல் எனக்கும் வந்தது. இது தொடர்பாக உடனடியாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். தலைமைக் கல்வி அதிகாரி (சிஇஓ) அதற்கான விளக்கத்தையும் அவர்களிடம் கேட்டுள்ளார். இது தொடர்பான புகார்கள் நேற்றைக்குத்தான் தங்களுக்கும் வந்ததாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புகாருக்கான விளக்கத்தை சிஇஓ மூலமாக பள்ளிக் கல்வித்துறை கேட்டுள்ளது. கமிட்டி அமைத்து விசாரணை நடத்தப்படும் எனப் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே இதே மாதிரியான புகார்கள் வந்திருந்தால், உரிய ஆதாரங்கள் இருந்தால் நிச்சயம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.