Chennai police registered case on five thousand bjp members including Annamalai

Advertisment

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை ஒன்றிய அரசு, மே 21ஆம் தேதி குறைத்தது. அதன்படி, பெட்ரோல் விலை 9 ரூபாய் 50 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, மாநில அரசும் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க வேண்டுமென பாஜக தலைவர் அண்ணாமலை கோரிக்கை வைத்தார். பெட்ரோல், டீசல் மீதான வரியை மாநில அரசு குறைக்காவிட்டால் தமிழக பாஜக சார்பில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம் எனத் தெரிவித்திருந்தார்.

அதன்படி, பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் கோட்டையை நோக்கிய முற்றுகை பேரணி நேற்று நடந்தது. ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து கோட்டையை நோக்கிப் புறப்பட்ட பாஜக தொண்டர்கள், பாரத் மாதாகி ஜெய், வந்தே மாதரம் எனக் கோஷம் எழுப்பியபடி சென்றனர். இதனால் தலைமைச் செயலகம் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. தொடர்ந்து, தலைமைச் செயலகம் நோக்கிப் பேரணியாக புறப்பட்ட பாஜகவினரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அண்ணாமலையுடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, கட்சியினர் கலைந்து சென்றனர்.

இந்தப் போராட்டத்தில், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, மாநில துணைத் தலைவர்கள் வி.பி.துரைசாமி, கரு.நாகராஜன், நாராயணன் திருப்பதி, மாநில செயலாளர்வினோஜ் பி.செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Advertisment

இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வலியுறுத்தி தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உள்ளிட்ட 5 ஆயிரம் பேர் மீது சட்ட விரோதமாக கூடுதல், அரசு அதிகாரி உத்தரவை மீறி செயல்படுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.