Skip to main content

போக்குவரத்து மாற்றம் குறித்து சென்னை காவல்துறை முக்கிய அறிவுறுத்தல்

Published on 05/01/2024 | Edited on 05/01/2024
Chennai Police important instruction regarding traffic changes

சென்னை ரன்னர்ஸ் சார்பில் 4 பிரிவுகளாக (42.195 கி.மீ, 32.186 கி.மீ, 21.097 கி.மீ மற்றும் 10 கி.மீ) ‘சென்னை மாரத்தான்’ என்ற பெயரில் மாரத்தான் ஓட்டம் நாளை (06.01.2024) காலை 04.00 மணி முதல் நடைபெறுகிறது. இந்த மாரத்தான் ஓட்டம் சென்னை நேப்பியர் பாலம் மற்றும் பெசன்ட் நகர் ஆல்காட் நினைவுப் பள்ளியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு காமராஜர் சாலை, சாந்தோம் ஹை ரோடு, டாக்டர் டி.ஜி.எஸ். தினகரன் சாலை, சர்தார் படேல் சாலை, ஓ.எம்.ஆர்., கே.கே. சாலை, இ.சி.ஆர் வழியாக இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தைச் சென்றடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை மாரத்தான் ஓட்டத்தை முன்னிட்டு, சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ‘அடையார் மார்க்கத்திலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் திரு.வி.க. பாலம், டாக்டர் டி.ஜி.எஸ். தினகரன் சாலை, சாந்தோம் ஹை ரோடு, காமராஜர் சாலை மற்றும் உழைப்பாளர் சிலை வரை வழக்கம் போல் எந்தவித மாற்றமும் இல்லாமல் செல்லலாம்.

போர் நினைவிடத்திலிருந்து திரு.வி.க. பாலம் வரை வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. மேலும் வாகனங்கள் கொடி மரச் சாலை வழியாகத் திருப்பி விடப்பட்டு - வாலாஜா பாயின்ட் அண்ணா சாலை வழியாகத் தங்களது இலக்கை சென்றடையலாம். ஆர்.கே. சாலையிலிருந்து காந்தி சிலை நோக்கி வரும் வாகனங்கள் வி.எம்.தெரு சந்திப்பில் திருப்பி விடப்படும். அவ்வாகனங்கள் ராயப்பேட்டை ஹை ரோடு, லஸ் கார்னர், ஆர்.கே. மடம் சாலை வழியாகத் தங்களது இலக்கை சென்றடையலாம்.

மத்திய கைலாஷிலிருந்து வரும் வாகனங்கள் பெசன்ட் அவென்யூ சாலையை நோக்கி அனுமதிக்கப்பட மாட்டாது. அவ்வாகனங்கள் எல்.பி. (LB) சாலை, சாஸ்திரி நகர், திருவான்மியூர் சிக்னல் வழியாகத் தங்களது இலக்கை சென்றடையலாம். காந்தி மண்டபத்திலிருந்து வரும் வாகனங்கள் உத்தமர் காந்தி சாலை செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது. அவ்வாகனங்கள் எல்.பி. சாலை, சாஸ்திரி நகர், திருவான்மியூர் சிக்னல் வழியாகத் தங்களது இலக்கை சென்றடையலாம்.

பெசன்ட் நகர் 7வது அவென்யூவில் இருந்து வரும் வாகனங்கள் எலியாட்ஸ் பீச் நோக்கி அனுமதிக்கப்படாமல், எம்.ஜி. சாலையை நோக்கி திருப்பி விடப்படும். மாநகர பேருந்துகள் மட்டும் பெசன்ட் நகர் டெப்போவிற்கு அனுமதிக்கப்படும். பெசன்ட் அவென்யூ, எம்.எல் (ML) பார்க் நோக்கி அனுமதிக்கப்பட மாட்டாது. எனவே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல்துறைக்கு ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்