Skip to main content

சென்னை பள்ளிகளுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்; காவல்துறை விளக்கம்

Published on 08/02/2024 | Edited on 08/02/2024
Chennai Police Explanation for  threat to Chennai schools

சென்னை அண்ணாநகர், பாரிமுனை, கோபாலபுரம், ராஜா அண்ணாமலைபுரம், ஜெ.ஜெ.நகர், ஆர்.ஏ.புரம் ஆகிய பகுதிகளில் உள்ள 10க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து பள்ளிகளில் இருந்து மாணவர்களை பெற்றோர்கள் அழைத்துச் செல்கின்றனர். பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததையடுத்து மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர். இதேபோன்று திருமழிசையில் உள்ள பிரபல பள்ளிக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. 

அதே சமயம் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் என போலீஸ் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் காவல்துறையினர் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக சென்னை மாநகர காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில், ‘வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினோம். பள்ளிகளில் சோதனை செய்ததில் எந்தவித மர்மப் பொருளும் கைப்பற்றப்படவில்லை’ என்று கூறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சென்னை மாநகர கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். அப்போது அவர், “சென்னையில் உள்ள 13 பள்ளிகளுக்கு ஒரே மின்னஞ்சல் முகவரி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது எனத் தெரியவந்தது. அதன் பேரில் பள்ளிகளில் வெடிகுண்டு மிரட்டல் குறித்து சோதனை நடத்தப்பட்டது. அங்கு சந்தேகப்படும் படியாக பொருட்கள் ஏதும் இல்லை. அதனால், அந்த மிரட்டல் அனைத்தும் புரளி. புரளியை கிளப்புவதற்காக அனுப்பப்பட்ட மிரட்டலாகவே தெரிகிறது. வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்கள் எந்தவித நிபந்தனையும் விதிக்கவில்லை. 

மேலும், வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால் மின்னஞ்சல் முகவரியில் வந்த விவரங்களைத் தெரிவிக்க இயலாது. இந்த மிரட்டல் தொடர்பாக பொதுமக்கள் பதற்றம் அடைய வேண்டாம். மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். மிரட்டல் விடுத்த குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்து நடவடிக்கை எடுக்கவுள்ளோம்” என்று தெரிவித்தார்.

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு விடுமுறை அறிவிப்பு!

Published on 30/04/2024 | Edited on 30/04/2024
Holiday notification for Chennai High Court

கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. நீர்ச்சத்து குறைபாட்டை தடுப்பதற்காக ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ் கரைசல்களை ஆயத்தமாக வைத்திருக்கும்படி தமிழக அரசு அறிவித்துள்ளது. கோடை காலம் தொடங்கியுள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பலரும் சுற்றுலாத் தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

மேலும் கோடைக் காலத்தையொட்டி கடும் வறட்சியான சூழல் நிலவுவதால் மேற்குத்தொடர்ச்சி மலை உள்ளிட்ட வனப்பகுதியில் வசிக்கும் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளு, கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் உணவு மற்றும் குடிநீரைத் தேடி வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. அதோடு இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் தமிழகத்திற்கு தொடர்ந்து வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நாளை (01.05.2024) முதல் ஜூன் 2 ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் விடுமுறைக்கால அவசர வழக்குகளை வாரந்தோறும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் தாக்கல் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் ஜோதிராமன் வெளியிட்டுள்ளார். அந்த உத்தரவில் அவசர கால வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளின் பெயரையும் பதிவாளர் ஜோதிராமன் வெளியிட்டுள்ளார். 

Next Story

விபத்தில் சிக்கி உயிரிழந்த காவலரின் கண்கள் தானம்!

Published on 30/04/2024 | Edited on 30/04/2024
Eye donation of a policeman who passed away in a two-wheeler accident

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை, இவர் வாணியம்பாடி கிராமிய காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி 1 வயதில் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கடந்த 28  ஆம் தேதி இரவு அண்ணாமலை தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் நாட்றம்பள்ளி நோக்கிச்சென்று கொண்டிருந்த போது, கல்லாறு என்ற பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், சாலையோர  தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற காவலர் அண்ணாமலையும் மற்றும் அவரது நண்பரும் படுகாயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

சிகிச்சை பலனளிக்காமல் அண்ணாமலை 29 ஆம் தேதி மாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து காவலர் அண்ணாமலையின் கண்களை அவரது குடும்பத்தினர் தானமாக வழங்கினர்.