
பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க இன்று தமிழக தலைநகரான சென்னைக்கு வருகை தர இருக்கிறார் பிரதமர் மோடி. டெல்லியில் இருந்து விமானத்தில் சென்னை புறப்பட்ட நிலையில் 10:35 மணிக்கு சென்னை வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அவர், வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் புதிய மெட்ரோ ரயில் சேவை உட்பட பல்வேறு திட்டங்களை தொடங்கிவைக்க இருக்கிறார். இந்த நிகழ்வில் தமிழக முதல்வர், துணை முதல்வர், ஆளுநர், அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
தமிழகம் வரும் பிரதமர் மோடி அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் என்ற தகவல்கள் வெளியான நிலையில், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, ''இது முழுமையான அரசு நிகழ்ச்சி. இதில் பிரதமர் அரசியல் பேசுவதற்கான வாய்ப்பு இல்லை. கூட்டணி குறித்து ஜே.பி.நாட்டாவும், அமித்ஷாவுமே பேசுவார்கள்'' என கூறியிருந்தார்.
இந்நிலையில் பிரதமர் நிகழ்ச்சியில் பங்கேற்க பாமக நிர்வாகிகள் வருகை தந்துள்ளனர். பாமக நிர்வாகிகள் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி ஆகியோர் சென்னைக்கு வந்துள்ளனர். அழைப்பு வந்துள்ளதால் நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தந்துள்ளதாக பாமக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தற்போதுவரை கூட்டணியில் உள்ள தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் பிரதமர் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தேமுதிக சார்பில் பார்த்தசாரதியும், தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஜி.கே.வாசனும் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற உள்ளனர். இதனால் பிரதமர் நிகழ்ச்சியிலேயே கூட்டணி இறுதிசெய்யப்பட இருப்பவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.