Skip to main content

குன்றத்தூரில் பறக்கும் பட்டங்கள்... உயிரை கையில் பிடித்தப்படி நடமாடும் மக்கள்!!!

Published on 13/06/2020 | Edited on 13/06/2020
chennai


சென்னையில் மாஞ்சா நூல் தயாரிப்பு மற்றும் மாஞ்சா நூலில் பட்டம் விடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி மாஞ்சா நூல் மற்றும் பட்டம் தயாரிக்கும் நபர்கள், பட்டம் விடும் நபர்கள் அனைவரையும் கைது செய்து, அவர்கள் மீது குண்டர் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என்று போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும் காவல்துறை சார்பில் மாஞ்சா நூலால் பட்டம் விடுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இருப்பினும் இந்த ஊரடங்கு காலத்தில் சிலர் பட்டம் விடுகின்றனர். அதனை அறிந்த போலீசார் எச்சரிக்கை செய்துள்ளனர்.


இந்த எச்சரிக்கை சென்னை நகருக்கு மட்டுமா சென்னை புறநகர்களுக்கும் பொருந்துமா என பொதுமக்கள் புலம்பி வருகின்றனர். சென்னை அருகே குன்றத்தூர் நகரிலும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் ஊரடங்கு காரணமாகவும், பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாலும் மாலை நேரங்களில் சிலர் பட்டம் விடுகின்றனர். இரவு 10 மணி வரையும் பட்டங்கள் பறக்கின்றன. இந்தப் பட்டங்கள் இப்பகுதி பொதுமக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மாலை நேரங்களில் பட்டம் பறப்பத்தை கவனித்து எச்சரிக்கையுடன் செல்கின்றனர். மாலை 7 மணிக்கு மேல் சாலையில் செல்லும்போது அதனை சரியாக கவனிக்கவும் முடியவில்லை என்பதால் உயிரை கையில் பிடித்தப்படி நடமாட வேண்டியுள்ளது. அந்தப் பட்டங்கள் சாதாரண நூலை பயன்படுத்தி விடுகிறார்களா? மாஞ்சா நூலை பயன்படுத்தி விடுகிறார்களா? என்பது தெரியாது. அதனால்தான் அச்சத்துடன் நடமாட வேண்டியுள்ளது என்கின்றனர். 


பொதுவாக பட்டம் விடுகிறவர்களுக்கு நேராக இந்தப் பட்டம் பறப்பது இல்லை. காற்று அடிக்கும் திசைக்கு ஏற்ப பறக்கும். திடீரென பட்டம் கீழே இறங்கும்போது சாலையில் சென்றுகொண்டிருப்பவர்கள் மீதோ, வீட்டின் மாடியில் நின்று கொண்டிருப்பவர்கள் மீதோ அதாவது கழுத்தில் சுற்றிக்கொண்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படும். 

 

 


இந்த கரோனா காலத்தில் வேலைவாய்ப்பு மற்றும் வருமானத்தை இழந்துள்ள ஏழை, எளிய மக்கள் இந்த பட்டத்தினால் பாதிக்கப்பட்டு காயம் ஏற்பட்டால் மருத்துவமனைகளுக்கு அலைவதும் கடும் சிரமம். உயிரே போகும் நிலைக் கூட வரலாம். கடந்த ஓரிரு வருடங்களுக்கு முன்பு குன்றத்தூர் அருகே அனகாபுத்தூர் வழியே செல்லும் மதுரவாயல் - பெருங்களத்தூர் பைபாஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த வாலிபரின் கழுத்தில் மாஞ்சா நூல் பட்டம் மாட்டியதில் அவர் உயிரிழந்தார். அதற்கு பிறகு போலீசார் விசாரணை நடத்தி சம்மந்தப்பட்டவர்களை கைது செய்தனர். உயிரிழந்த வாலிபரின் மனைவி கைக்குழந்தயுடன் கஷ்டப்பட்டு வருகிறார்.


பட்டம் விடும் நபர்களை அரசு குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தாலும், பட்டத்தின் நூல் கழுத்தில் சுற்றி உயிரிழந்தவர்களின் குடும்பம் அந்த இழப்பிலிருந்து மீண்டு வர முடியாது என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினர், சமூக ஆர்வலர்கள் சென்னை மட்டுமல்ல, புறநகர்களிலும் பட்டம் விடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். 

 

சார்ந்த செய்திகள்