Chennai is a mirror that reflects the whole of India Chief Minister M.K.Stalin

சென்னை ஒட்டுமொத்த இந்தியாவைப் பிரதிபலிக்கும் நிலைக்கண்ணாடி என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisment

வருடந்தோறும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி 'சென்னை தினம்' கடைப்பிடிக்கப்பட்டு, கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று 384வது சென்னை தினமாகும். இதையொட்டி தமிழக அரசு சார்பிலும், சென்னை மாநகராட்சி சார்பிலும் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதையொட்டி சென்னை மாநகராட்சி மற்றும் இந்து குழுமம் சார்பில் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் ‘அக்கம் பக்கம்’ என்ற பெயரில் பள்ளி மாணவர்களின் புகைப்படக் கண்காட்சியைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களை முதல்வர் பார்வையிட்டார். அப்போது அமைச்சர்கள் சேகர் பாபு, மா. சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு, சென்னை மேயர் பிரியா ராஜன், துணை மேயர் மகேஷ்குமார், மூத்த பத்திரிகையாளர் இந்து என். ராம், எனப் பலரும் உடன் இருந்தனர்.

Advertisment

இந்த கண்காட்சியில் சென்னையின் பாரம்பரியத்தை விவரிக்கும் வகையில் சென்னையின் புகழ்பெற்ற இடங்கள், நிகழ்வுகள் என கருப்பு வெள்ளை புகைப்படங்களும், இந்து குழுமம் சார்பில் சென்னையின் வரலாற்று ஆவண புகைப்படங்களும் இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை தினம் குறித்து ட்விட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “பேரறிஞர் அண்ணா தமிழ் நிலத்துக்கு, தமிழ்நாடெனப் பெயர் சூட்டினார். தமிழினத் தலைவர் கலைஞர் தமிழ்நாட்டின் தலைநகருக்குச் சென்னை எனப் பெயர் மாற்றினார். கோடிக்கணக்கான மக்களின் வாழ்வியலோடு பிணைந்துவிட்ட சொல் என்பதா, ஊர் என்பதா, உயிர் என்பதா சென்னையை. சென்னை ஒட்டுமொத்த இந்தியாவைப் பிரதிபலிக்கும் நிலைக்கண்ணாடி. பன்முகத்தன்மையின் சமத்துவச் சங்கமம். வாழிய வள்ளலார் சொன்ன தருமமிகு சென்னை.” எனத்தெரிவித்துள்ளார்.